BREAKING NEWS

இங்கினியாகலை குளத்திலிருந்து நாளை நீர் திறப்பு


சுமார் 55,000 ஏக்கர் நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனம்
அம்பாறை இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து சிறுபோக நெற் செய்கைக்காக நாளை தண்ணீர் திறந்துவிடப்படும். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸின் பணிப்புரைக்கமைய இதற்கான நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற் கொண்டுள்ளது. இதனால், அம்பாறை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகள் நீர்ப்பாசனம் பெறவுள்ளன.
அம்பாறை மாவட்டத்திற்கு நீர்வழங்கும் இங்கினியாகல குளத்தில் ஏழு இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீர் இருப்பது வழமை.
ஆனால் அங்கு இம்முறை பருவகால மழை வீழ்ச்சி பொய்த்தால் தற்போது ஆக 2 இலட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீர் மாத்திரமே உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 2009 க்கு பிறகு இவ்வாண்டு இப்படியான துர்ப்பாக்கியநிலை தோன்றியுள்ளது.
இதனால் அங்குள்ள ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பயிர்ச் செய்கைக் காணிகளில் எதிர்வரும் சிறுபோகம் பூரணமாக செய்கை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளது. ஆக 45 வீதமான காணிகளுக்கு அதாவது சுமார் 55 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு மட்டுமே நீர் வழங்க முடியுமென நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சுமார் 65 ஆயிரம் ஏக்கர் செய்கை பண்ண முடியாமல் தரிசாக கிடக்கப்போகிறது.
இதனால் காணிகளோடு சம்பந்தப்பட்ட விவசாயிகள் தொடக்கம் சகலரும் பாதிப்படைவதோடு மொத்த நெல்லுற்பத்தியும் பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயமும் தோன்றியுள்ளது. விவசாயத்தை மட்டும் நம்பியிருப்போர் பாடு பெரும் திண்டாட்டமாக அமையப்போகிறது.
இலங்கையின் மொத்த நெல்லுற் பத்தியில் 20 வீத நெல்லுற்பத்தி அம்பாறை மாவட்டத்திலிருந்து கிடைப்பதாகும். அதற்கான நீரை வழங்குவது இங்கினியாகல குளம் ஆகும். அம்பாறை மாவட்டத்தில் பொதுவாக அம்பாறை பிரிவில் 42 ஆயிரம் ஏக்கர் நிலமும் கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பிரிவில் 42 ஆயிரம் ஏக்கர் நிலமும் அக்கரைப்பற்றுப் பிரிவில் 34 ஆயிரம் ஏக்கர் நிலமும் மொத்தமாக 1 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலமுள்ளது. தற்போது இங்கினியாகல குளத்திலுள்ள 2 இலட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீரை மிகவும் கவனமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டிய தேவை அனைவருக்குமுள்ளது. இதில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீர் பின்வரும் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய தேவை யுள்ளது. அதாவது குடி தண்ணீர் வழங்கல் ஏலவே 9000 ஏக்கரில் செய்கைபண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு நீர் வழங்கல் ஆவியுயிர்ப்பு போன்ற இன்னோரன்ன தேவைகளுக்கு அவை பயன்பட தேக்கிவைக்க வேண்டியுள்ளது.
மீதி தண்ணீரையே சிறுபோக நெற்செய்கைக்கு பயன்படுத்த முடியும். அதாவது, 45 வீதமான காணிகளுக்கு சுமார் 55 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு மாத்திரமே நீர்ப்பாசனம் வழங்கக்கூடிய நிலையுள்ளது. எனவே, இவற்றை மாவட்டத்திலுள்ள 04 பெரும் பிரிவுகளுக்கும் பிரித்து வழங்கவேண்டும்.
இதற்காக அம்பாறை அரச அதிபர் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் அம்பாறை கச்சேரி ஆகிய இடங் களில் விவசாய அமைப்புகள் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர் களோடு பல கூட்டங்களை நடாத்தி இறுதியாக ஏப்ரல் 5ம் திகதி தண்ணீரைத் திறந்துவிடுவதென் தீர்மானிக்கப்பட்டது. யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டா தென அரச அதிபர் அக் கூட்டங்களில் உறுதியளித்தார். அதன்படி நாளை 5ம் திகதி சனிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar