BREAKING NEWS

சாதாரண ஒருவர் வழக்கு வைத்து காட்டிய பின்னரே அமைச்சர் ரிசாதுக்கு தைரியம் வந்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

மன்னிப்பு அல்லது 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டு மெனக்கோரி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணியால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு வண.கலகொட அத்தே ஞானசார தேரர் பதில் ஒன்றும் அனுப்பாமையினால் இந்த வழக்கு அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 மார்ச் 20ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களிலோ வண.கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சருக்கு எதிராக தீங்கு விளைவிக்கக்கூடிய பொய்யான மற்றும் அமைச்சரின் நற்பெயருக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய கூற்றுக்களை வெளியிட்டதாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் வழக்காளியான அமைச்சர் ரிசாட் பதியுதீன், தேரரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை பல இடங்களில் திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
தேரரினால் நாடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வேறொரு ஊடகவியலாளர் மாநாட்டில் தேரரினால் அரங்கேற்றப்பட்ட நாடகமும் இஸ்லாமிய சமயத்திற்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக அவர் செயற்பட்டு வருகிறார் என்பதனைக் கோடிட்டுக் காட்டுகிறது.
தேரரினால் அமைச்சருக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்கள் அமைச்சரின் நற்பெயருக்கும் புகழுக்கும் பாரிய தீங்கு விளைவித்துள்ளமையால் தேரரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar