-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியை மண்ணிட்டு நிரப்பி வீடுகளை அமைப்பதற்கு அனுமதி கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லீ மெரிடியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்திற்கு முன்னதாகவே அங்கு கூடிய பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைபவத்திற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது- அவர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவன்னம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்;
“கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட கொடூர சுனாமி பேரலைகளால் இலங்கையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சாய்ந்தமருது பிரதேசம் அதி உச்ச அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
சுனாமி பேரலைகள் சாய்ந்தமருதை தாக்குவதற்கு முன்பு பிரதான வீதியில் இருந்து கடற்கரை வரை ஒரு கிலோமீட்டராக இருந்த மக்கள் வாழும் பிரதேசம் இப்போது கிட்டத்தட்ட 700 மீட்டராக குறைந்துள்ளது.
சனநெரிசல் மிக்க சாய்ந்தமருது பிரதேசத்தில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக மீன்பிடி, வியாபாரம் மற்றும் விவசாயம் போன்றவை இருப்பதால நாம் குறித்த பிரதேசத்திலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.
நாம் சுனாமியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் கரையோரத்தில் மீண்டும் இருப்பதற்கு அஞ்சுகின்றோம். அதனால் சாய்ந்தமருதின் மேற்கே அமைந்துள்ள நீண்ட காலமாக நெற்செய்கை பண்ணப்படாமல் காணப்படும் காணிகளை சிறு சிறு துண்டங்களாக கொள்வனவு செய்து- அவற்றில் மேட்டு நிலப்பயிர் செய்வதுடன் அங்கு குடியிருப்பதற்காக வீடுகளையும் அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம்.
ஆனால் அரசின் சுற்று நிருபங்களைக் காட்டி அதிகாரிகள் எமது முயற்சிகளுக்கு தடை விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
ஏனைய பிரதேசங்களில் விவசாயக் காணிகளில் குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது எமது பிரதேசத்தில் மாத்திரம் அதற்கு தடை விதிக்கப்படுவதானது எமக்கு இழைக்கும் பெரும் அநியாயமாகும். இதனை சுட்டிக்காட்டி எமது நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்று குறிப்பிட்டனர்.
தான் மேயரானால் இது விடயத்தில் உள்ள சட்டப்பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என தேர்தல் காலத்தில் கூறிய நிசாம் காரியப்பரின் தேர்தல் கால வாக்குறுதியும் பொய்யாகிப்போய் விட்டது.