BREAKING NEWS

அளுத்கம பேருவல தாக்கப்பட்ட மக்கள் நடுத்தெருவில். ரணில் காட்டம். பிரதமர் சமாளிப்பு.

மதிப்பீடுகளின் டிப்படையில் நஷ்டஈடு

அளுத்கம, பேருவளை சம்பவங்களினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட செயலாளர்கள் ஊடாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தி.மு.ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க 23/2 நிலையியல் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்
மேலும் கூறியதாவது, அளுத்கம பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது ஜனாதிபதியோ பாதுகாப்பு செயலாளரோ நாட்டில் இருக்கவில்லை. ஆனால் அவர்களது ஆலோசனைப்படி சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்றும் நிலைமைகளைக் கட்டுப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். குறுகிய காலத்தினுள் நிலைமையை முற்றாகக் கட்டுப்படுத்தி பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பது தொடர்பில் இரு தரப்பு மதத் தலைவர்களையும் அழைத்து பேச்சுநடத்தப்பட்டது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் அந்தப் பிரதேசங்களுக்குச் சென்று தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இனமத பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மோதல்களினால் ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச்சேதங்கள் குறித்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களினால் மூவர் உயிரிழந்தனர். நான்கு வீடுகளும் இரண்டு கடைகளும் ஒரு தொழிற்சாலையும் முற்றாக சேதமடைந்துள்ளன.
ஐம்பதாயிரம் ரூபாவுக்குக் குறைந்த நஷ்டம் ஏற்பட்ட 125 வீடுகளும் அதனைவிட அதிக நஷ்டம் ஏற்பட்ட 71 வீடுகளும் 50 ஆயிரம் ரூபாவுக்குக் குறைந்த நஷ்டம் ஏற்பட்ட 35 வீடுகளும் அதனைவிடக் கூடுதலான நஷ்டம் ஏற்பட்ட 35 வீடுகளும் இருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. சேதமடைந்த கடைகள் மற்றும் வீடுகளை திருத்துவதற்காக இதுவரை 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலா ளருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட செயலங்களின் ஊடாக உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படும். திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு முழுமையாக சேதமடைந்த கட்டடங்கள் அகற்றப்பட்டு முழுமையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar