BREAKING NEWS

முஸ்லிம்கள் தமது எதிர்காலத்தை பாழாக்கிக்கொள்ள வேண்டாம்

சோரம் போன, கையாலாகாத முஸ்லிம் அமைச்சர்களின் கட்சிகளை நம்பி ஊவா மாகாண முஸ்லிம்கள் தமது எதிர்காலத்தை பாழாக்கிக்கொள்ள வேண்டாம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஊவா மாகாண சபை தேர்தல் பற்றிய கட்சியின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

     முஸ்லிம்கள் மிகவும் குறைந்தளவில் வாழும் தென்னிலங்கை பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகள் தனித்து போட்டியிடுவதை எமது கட்சி எதிர்த்தே வருகிறது. அதுவும் இன்றைய சூழலில் இது முற்றாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். முன்பெல்லாம் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் கலந்து வாழும் முஸ்லிம்கள் தாம் ஏதும் இனவாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால் சிங்கள அரசியல்வாதிகள் முன்னின்று அதனை தடுத்ததை கண்டுள்ளோம். ஆனால் முஸ்லிம் கட்சிகள் தென்னிலங்கையில் காலூன்ற தொடங்கிய பின் முஸ்லிம்கள் விடயத்தில் சிங்கள அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பதையும் அதற்கு காரணமாக தமக்கு வாக்களிக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள் என கூறுவதையும் காண்கிறோம். அதே போல்; முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிப்பார்கள் என கூறி சிங்கள மக்கள் சிங்கள கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்வதையும் இதற்காக இனவாதத்தை தூண்டுவதையும் நாம் பரவலாக காண்கிறோம்.

இந்த நிலையில் ஊவா வாகாண முஸ்லிம்களை பொறுத்த வரை மாகாண சபையில் முஸ்லிம் கட்சிகள் மூலம் தமக்கொரு பொம்மை பிரதிநிதி முக்கியமா அல்லது ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட ஊவா முஸ்லிம்களின் இருப்பும் சிங்கள மக்களுடனான ஐக்கியமும் முக்கியமா என்பதை நிதானமாக ஆராய வேண்டியது அவசியமாகும்.  ஒரு உறுப்பினருக்காக முஸ்லிம்  சமூகத்தை மொத்தமாக அடகு வைக்க இடமளிக்க முடியாது. அதுவும் முஸ்லிம் கட்சி மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அதுவும் அமைச்சர்கள் தலைமையிலான கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்டால் அவர் நிச்சயம் ஆளுந்தரப்புக்கே ஆதரவளிப்பார். இவ்வாறு ஆளுந்தரப்புக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஏதாவது சமூகத்துக்கு செய்ய முடியுமா என்றால் அது கூட முடியாத நிலையே காணப்படும். அவர் முஸ்லிம் கட்சியை சேர்ந்தவர் என்பதால் ஒரு செல்லாக்காசாகவே பெரும்பான்மை சிங்கள மக்களை கொண்ட சபையில் பார்க்கப்படுவார். அவரும் தனது கையாலாகா தனத்தை மறைப்பதற்காக தான் ஆளுந்தரப்பில் எதிர் கட்சியாக இருப்பதாக அறிக்கை விடுவார்.

இதனை நாம் வெறுமனே கற்பனையில் கூறவில்லை. நிதர்சனமாக கண்ட பின்பே கூறுகிறோம். நமது அனுபவங்கள் மூலம் நாம் படிப்பினை பெறாவிட்டால் நம்மை முட்டாள்கள் என்றே எதிர்கால தலை முறை கூறும். இத்தகைய நிலையை மேல் மாகாண சபையில் அமைச்சர்களான ஹக்கீமினதும், ரிசாதினதும் கட்சிகள் தனியாக போட்டியிட்டு தலா ஒரு உறுப்பினரை பெற்றதன் மூலம் கண்டோம். அதுவும் அரசுக்கெதிராக உணர்ச்சிகரமாக பேசி, முஸ்லிம்களை உசார் மடையர்களாக்கி,  சிங்கள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், துவேசத்தையும் விதைத்து வெற்றி பெற்றபின் அரச தரப்பில் உட்கார்ந்ததையும் இப்போது எந்த சேவையும் செய்யாமல் அரச தரப்பில் இருந்து கொண்டே அரசை கண்டித்து அறிக்கை விடுவதையுமே காண்கிறோம்.

இவர்களின் தலைவர்களான அமைச்சர்களே முஸ்லிம் சமூகத்துக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்த முடியாதவர்களாக, தங்களது சுயநலன்களை மட்டும் காப்பதற்காக அரசில் ஒட்டிக்கொண்டு நாம் அரசுக்குள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என வெட்கமின்றி கூறி சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றும் போது இவர்கள் கட்சியின் மூலம் தெரிவாகும் ஊவா மாகாணத்தின் ஒரு உறுப்பினர் மூலம் சமூகத்துக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பதை ஊவா மக்கள் அவசியம் சிந்திக்க வேண்டும் என்பதை உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி  என்ற பொறுப்புணர்வுடன் நாம் சொல்கின்றோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar