பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடதென தெரிவித்த உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவுத் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே முஸ்லிம்களுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை கொழும்பு நூதனசாலையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பஷிர் சேகுதாவுத் இவ்வாறு கூறினார். முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்; வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்துள்ள புரட்சி, போராட்டங்களை சில மேலைத்தேய நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதமாக சாயம்பூசுகின்றன. காஸா, சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சிகள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுகின்றது.
யூத, சியோனிஸ கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சில ஊடகங்கள் முஸ்லிம்களின் இருப்பு ,பாதுகாப்புக்கான புரட்சிகளை அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்று முத்திரையிட்டு உலக நாடுகளிலிருந்து அந்நாடுகளை தனிமைப்படுத்தப் பார்க்கின்றன. இதனால் காஸா, லெபனான், சிரியா மக்களுக்கு முஸ்லிம் நாடுகள் நேசக்கரம் நீட்டுவது தடுக்கப்படுகிறது. மனிதாபிமான உதவிகள் தொண்டுகள் வழங்குவதற்கும் தடை விதிக்கப்படுகின்றன.
அவ்வாறு தொண்டாற்ற நிதியுதவியளிக்க, முனையும் அமைப்புக்களும் பயங்கரவாதமாக பார்க்கப்படும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இதை மையமாக வைத்தே இலங்கை முஸ்லிம்களையும் இன்று சிலர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சில அமைப்புக்கள் இஸ்லாத்தின் பேரில் நடத்தும் தாக்குதல்களால் இலங்கையிலுள்ள சில அமைப்புக்களும் பாதுகாப்புப் பிரிவினரால் கடுமையான அவதானிப்புக்குட்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் அமைப்புக்கள் மத அனுஷ்டானங்கள் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிலும் நிதானம் பேணவேண்டும். ஆயிரம் ஆண்டு காலமாக இந்நாட்டின் பாதுகாப்பிற்கு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள அர்பணிப்பை சகோதர சமூகங்கள் கெளரவிக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் இலங்கையராக வாழவேண்டுமென்ற விவாதம் இன்று துளிர்விட்டுள்ளது.
ஆனால் இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டே இலங்கைக்கு விசுவாசமுள்ளவர்களாக வாழ்கின்றனர்.
இஸ்லாமிய இயக்கங்களுக்குள்ளேயுள்ள (சியா, சுன்னி, தெளஹீத், சலபி) கருத்து முரண்பாடுகள். மோதல்கள் பயங்கரவாதமாக பார்க்கப்படும் நிலமை மாறவேண்டும். முஸ்லிம்களின் மத அடையாளங்களை மாற்றுவதற்கு இலங்கையில் சில குழுக்கள் இன்று தூக்கியுள்ள போர்க்கொடி பெளத்த தர்மத்துக்கு ஒவ்வாதது. வரலாற்றுக் காலம் தொட்டு முஸ்லிம்களின் நாளங்களில் இழையோடியுள்ள நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் தலைமைகளின் அரசியல் நகர்வுகள் அமைவதே இன்றைய அவசர தேவை.
உணர்ச்சிபூர்வமான அறிக்கைகளி னாலன்றி யதார்த்தபூர்வ செயற்பாடுகள் சிந்தனை சக்தியுள்ள தலைமையே இன்று முஸ்லிம்களுக்கு தேவைப் படுகிறது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரஃப் இதையே செய்தார். நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக இறுதியாக நகர்த்தப்பட்ட அரசியல் காய் நகர்த்தலே அது.
இதற்காகத்தான் மறைந்த தலைவர் மூவினங்களையும் ஒன்றுபடுத்தும் அரசியல் கட்சிபற்றி தனது அந்திம காலத்தில் சிந்தித்தார். சிறுபான்மை சமுகங்கள் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியை இழக்கவேண்டி ஏற்பட்டால் மூன்று சமூகங்களையும் சம அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியூடாக பேரம் பேசும் சக்தியை பெறுவதே அஷ்ரஃபின் நோக்கமாக இருந்தது.

Post a Comment