கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் கண்டி மாவட்டத்தை முதன்மைப்படுத்தி மத்திய மாகாணத்திலும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு என்பன தொடர்பில் செயல்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை (28/01/2015) முற்பகல் பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. அமைச்சா் றவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை தொகுதிகளில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு செயற்திட்டங்களின் வரைபடங்களை பார்வையிட்டதோடு, அவை பற்றிய விளக்கங்களையும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வறட்சியாலும், மாரி காலத்தில் வெள்ளப்பெருக்காலும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் சுட்டிக்காட்டி, அவற்றிற்கு தீர்வாக விசேட திட்டங்களைப் பற்றி பரிசீலிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, பொத்துவில், மட்டக்களப்பு, காத்தான்குடி, மூதூர், கிண்ணியா, திருகோணமலை உட்பட ஏனைய நகர்ப் புறங்களில் புதிதாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ள செயல்திட்டங்கள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் கவனம் செலுத்தினார்.

Post a Comment