எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைத்து பாராளுமன்றம் கலைக்கப் பட்டு பொது தேர்தல் நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி குழு கூட்டம் (09) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில், நடைபெறவுள்ள பொது தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை பிரதமராகவும் இரண்டாவதாக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை உப பிரதமராகவும் நியமித்து இரண்டரை வருடம் தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையாளர், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. உலகத்தில் எங்கும் இல்லாத அரசியல் முறை எமது நாட்டில் இன்று இருக்கின்றது இதை பார்த்து உலக நாடுகள் புதுமையடைகின்றன.
எமது நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம். 100 நாட்களுக்குள் நல்லாட்சியை ஏற்படுத்து வோம். இன்னும் 45 நாட்கள் எஞ்சியுள்ளன. நாம் கொடுத்த வாக்குறுதிகளை இந்த நாட்களுக்குள் நிறைவேற்ற முடியும். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் இந்நாட்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை நிறைவேற்றுவோம்.
அரச அதிகாரிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது. அரச அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதால் இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது. அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சுதந்திரமாக சேவையாற்றக் கூடிய முறையை நாம் ஏற்படுத்துவோம். சப்ரகமுவ மாகாணத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் யாவும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது. இதை நான் ஏற்று கொள்கின்றேன்.
இந்த மாகாணத்தில் இடை நிறுத்தப் பட்ட அபிவிருத்திப் பணிகள் யாவும் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துக்கோரளை, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த, மாகாண சபை அமைச்சர்களான ரஞ்ஜித் பண்டார, அதுலகுமார ராகுபந்த, பானுமுனிப்பிரிய மற்றும் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண பிரதான செயலாளர் ஹேரத் பி. குலரத்ன, மாகாண அமைச்சின் செயலாளர்கள், இரத்தினபுரி கேகாலை மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண் டனர்.
Post a Comment