அரசியலமைப்பு திருத்தத்தை அவசர சட்டமாக சமர்ப்பிக்கும் ஐ.தே.கவின் முயற்சி தோல்வி
அரசியலமைப்பு திருத்தத்தை அவசர சட்டமாக கொண்டுவரும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ. தே. க. முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனை சாதாரண சட்டமாக கொண்டு வர இணக்கம் காணப்பட் டுள்ளது. இது எதிர்க் கட்சிக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தேர்தல் முறையை மாற்றாது அரசியலமைப்பு திருத்தத்தை மாத்திரம் மேற்கொள்ள முயன்றால் ஐ. ம. சு. மு.வின் ஒரு வாக்கு கூட ஆதரவாக வழங்கப்படாது என்று குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பு திருத்தமும் தேர்தல் முறை மறுசீரமைப்பும் ஒன்றாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஐ. ம. சு. மு. கூட்டு கட்சிகளின் நிலைப்பாட்டிலே ஜனாதிபதியும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ. ம. சு. மு. கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் மாநாடு நேற்று எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் நடை பெற்றது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இதுவரை எதுவித இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். அரசியலமைப்பு திருத்தத்தை மாத்திரம் நிறைவேற்ற ஐ. தே. க. முயல்வதாக குற்றஞ்சாட்டிய எதிர்க் கட்சித் தலைவர், நிறைவேற்று அதிகாரத்தை குறைத்து தேர்தல் முறையை மாற்றிய மறுதினமே கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும் குறிப்பிட்ட அவர்,
அரசியலமைப்பு திருத்தமும் தேர்தல் மறுசீரமைப்பும் ஒன்றாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி தலைமையில் நடந்த கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் முறையை மாற்றுவதற்கு ஜனவரி மாதத்தில் குழு அமைத்து மார்ச் 21 ஆம் திகதி திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என 100 நாள் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றுமென நம்புகிறோம். 138 உறுப்பினர்கள் உள்ள ஐ. ம. சு. மு.வின் ஆதரவு இன்றி எந்த மாற்றமும் செய்ய முடியாது.
ஜனாதிபதி எப்பொழுதும் பிரதமரின் ஆலோசனை படி செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். இதனை ஏற்க முடியாது.
அரசியலமைப்பு திருத்தத்தை அவசர சட்டமாக கொண்டு வருவதை ஐ. ம. சு. மு. முழுமையாக எதிர்க்கிறது. இதற்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட வழங்கமாட்டோம் என அறிவித்திருந்தோம். இந்த நிலையில் அவசரமாக சட்டம் கொண்டு வரும் முடிவை ஐ. தே. க. பின்வாங்கிக் கொண்டுள்ளது. சாதாரண சட்டமாக கொண்டு வர இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனூடாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவும் ஆராயவும் அவகாசம் ஏற்பட்டுள்ளது.
1978 யாப்பு அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டது. புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அவசர சட்டமாக கொண்டு வரும் முயற்சி மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐ. தே. கவும், சு. க.வும் இருப்பதால் அதனை மறுசீரமைக்க இதுவே உகந்த காலமாகும்.
அரசியலமைப்பு திருத்தத்திற்கு 2, 3 வருடம் பிடிக்குமெனவும் இதனை அவசரமாக கொண்டு வர வேண்டா மெனவும் சில கட்சிகள் கோரியுள்ளன. விருப்பு வாக்கு முறையை மட்டும் மாற்றி தற்பொழுதுள்ள தேர்தல் முறையை முன்னெடுக்குமாறு சிறுபான்மை கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கை ஏற்கக்கூடியதல்ல. இதன் மூலம், வெற்றி பெறும் கட்சிகளுக்கே உறுப்பினர்களை தெரிவு செய்ய நேரிடும். தேர்தல் முறையை மாற்றிய பின்னர் இந்த வருடமில்லாவிட்டால் அடுத்த வருடம் கலப்பு முறையின் கீழ் தேர்தலை நடத்த முடியும்.
தேர்தல் குறித்து பிரதமர் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பார். தேர்தல் முறையை மாற்ற மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை பின்போட நாம் முயலவில்லை. எந்த நிமிடமும் நாம் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். தேர்தல் முறை மறுசீரமைப்பின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவார் என நம்புகிறோம். தேர்தல் மறுசீரமைப்பு இன்றி அவர் பொதுத் தேர்தல் நடத்த மாட்டார் என்றார்.
திஸ்ஸ விதாரண
சமசமாஜ கட்சி தலைவர் திஸ்ஸ விதாரண கூறியதாவது,
அரசியலமைப்பு திருத்தத்துடன் தேர்தல் முறையை மாற்ற ஜனாதிபதி இணங்கியுள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவதனால் சிறந்த நபர்கள் பாராளுமன்றம் தெரிவாக வேண்டும்.
எம்.பிக்கள் தொகையை 250 ஆக அதிகரிப்பதன் மூலம் கலப்பு முறையை சிறப்பாக மேற்கொள்ள முடியுமென தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கிறார். இதனை ஐ. தே. க. தலைவர் எதிர்க்கிறார். பாராளுமன்றத்தில் 250 எம்.பிக்களுக்கு இடமில்லை என்கிறார். இது ஒரு பிரச்சினையே கிடையாது என்றார்.
டி. யு. குணசேகர
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. யு. குணசேகர கூறியதாவது,
மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட 64 இலட்சம் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட 57 இலட்சம் வாக்குகளும் அரசியலமைப்பு திருத்தத்திற்காகவே வழங்கப்பட்டன. ஐ. தே. கவும். இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கலப்பு முறை மூலமே சாதாரண மனிதர்கள் கூட பாராளுமன்றம் தெரிவாக முடியும். தேர்தல் முறையை மாற்றாது பொதுத் தேர்தல் நடத்தக்கூடாது.
ஜி. எல். பீரிஸ்
ஜி. எல். பீரிஸ் எம்.பி. கூறியதாவது,
தற்போதுள்ள விகிதாசார முறையினால் பலவீனமான அரசாங்கமே உருவாகும். நிறைவேற்று அதிகாரம் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை கடந்த காலத்தில் பாதுகாக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் மாற்ற முயன்றால் அதனால் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும். நிறைவேற்று அதிகாரத்திற்கிருக்கும் கூடுதல் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக ஜனாதிபதியின் கீழ் சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்றார்.
இந்த ஊடக மாநாட்டில முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார. சுசில் பிரேம்ஜெயந்த், டக்ளஸ் தேவானந்தா, அநுர பிரியதர்சன யாப்பா, ஜி. எல். பீரிஸ், டி. யு. குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment