பிரஜைகள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் நேற்று அதிகாலை தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இரு பாதுகாவலர்கள் வாகனத்தில் பயணம் செய்த போதிலும் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என பதில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் நாவுல பிரதேசத்தில் வாகனம் சென்றுக் கொண்டிருந்த போது புதிதாக அமைக்கும் பாதையொன்றின் மண்மேட்டில் வாகனம் மோதியதால் விபத்துக்குள்ளாகியது. இதனால், வாகனம் பாதையோரத்தில் மரமொன்றுக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் வாகனம் திடீரென தீப்பற்றிக் கொண்டது.
இதன் போது வாகனத்தில் இருந்து அனைவரும் வெளியேறியதுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நாவுல பொலிஸார் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தினால் வாகனம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட சாரதி எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர். நாவுல பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment