சட்டவாட்சியை பொறுத்தவரை முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் என்பது இருவகைப்படும்.
1. முஸ்லிம்கள் சிறு பான்மையாக வாழும் நாடு. இதற்கு நபியவர்களும் சஹாபாக்களும் வாழ்ந்த மக்கா வாழ்க்கைக்கு ஒப்பானது.
2. இஸ்லாமிய ஆட்சியதிகாரத்தின் கீழ் வாழ்தல். இதனை மதீனாவின் வாழ்க்கைக்கு ஒப்பிடலாம்.
பொதுவாக இறைவன் எந்தவொரு ஆத்மாவையும் அதனது சக்திக்கேற்பவே அன்றி பொறுப்;பாக்க மாட்டான். குப்ரிய்யத்தான ஆட்சியின் கீழ் எந்தளவுக்கு இஸ்லாமிய சட்டங்களை கடைப்பிடிக்க முடியுமோ அந்தளவுக்கு கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்டம். மக்காவில் நபியவர்கள் காபிர்களின் கீழ் வாழ்ந்த போதும் தனது தோழர்களுடன் தனி ஒரு குழுவாக செயற்பட்டார்கள். அதன் படி குப்ரிய்யத்தான நாட்டில் முஸ்லிம்கள் தனிக்கட்சியாக செயற்படலாம் என்பதை தெரிந்து கொள்கிறோம். இதுபோலவே நமது நாட்டு வாழ்க்கையும் உள்ளது. ஆனாலும் இறைவனுதவியால் முஸ்லம்களை பலவந்தப்படுத்தும் எத்தகையதொரு சட்டமும் நமது நாட்டு பாராளுமன்றத்தில் இயற்றப்படவில்லை. உதாரணமாக கட்டாயம் சாராயம் குடிக்கத்தான் வேண்டும் என்றோ, கட்டாயம் சிலையை வணங்கத்தான் வேண்டும் என்றோ சட்டம் இயற்றப்படவில்லை. இதே பாராளுமன்றத்தில் நமது முன்னேர்கள் தங்களது தூர நோக்குடனான சிந்தனையின்படி, ஏனைய இனத்தவருடன் சரியான முறையில் அணுகி முஸ்லிம்களுக்கென குர்ஆனிய சட்டத்தையும் நமக்கு இயற்றி தந்துள்ளார்கள். அத்தகைய சிந்தனையாளர்களின் வாழ்க்கையையும் அவர்களது நடைமுறைகளையும் கற்காமல் தமது சிறு புத்திக்கு பட்டதெல்லாம் சரியென சிந்திப்பதை இன்றைய வாலிபர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம், இஸ்லாமிய சட்டம், ரசூலுள்ளாவின் வாழ்க்கை, இலங்கை பாராளுமன்றம், இலங்கை முஸ்லிம் முன்னோர்களின் வாழ்க்கை என்பவற்றிலெல்லாம் பூரண அறிவு இல்லாமல் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆட்சி அதிகாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் சில வழிகாட்டல்களை செய்துள்ளது. அவை:
1. மன்னராட்சி: பல நபிமார்கள் பரம்பரை மன்னர்களாக இருந்துள்ளார்கள்.
2. வாரிசு இல்லாமல் வேறு ஒருவரை அரசராக்குதல். யூசுப் நபி பதவியேற்றதை கூறலாம்.
3. மக்களை திரட்டி புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தல்: இதனை நபி மூசா ஆட்சிக்கு வந்ததை வைத்து புரியலாம்.
4. தானே மக்களுக்கு வழிகாட்டியாக நின்று கருத்துக்கள் மூலம் மக்களின் சிந்தனைகளை வளப்படுத்தி அம்மக்களுக்கு தலைமை தாங்கி ஆட்சி செய்தல்: இதனை நபியுள்ளாஹ் முஹம்மது (சல்) அவர்களின் ஆட்சியை வைத்து காணலாம்.
பெரும்பாலும் இவைதான் நபிமார்கள் காட்டிய ஆட்சி முறைகளாகும். அதன் பின் சஹாபாக்களை பொறுத்தவரை சமூகத்தவைர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சியாளரை தேர்வு செய்ததை காணலாம். இதற்கும் நபிகளின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ஜனநாயக தெரிவு முறையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகிறது. அதாவது சஹாபாக்கள் காலத்தில் சிலர் ஒன்றிணைந்து ஆட்சியாளரை தெரிவு செய்தனர். ஜனநாயகத்தில் பலர் சேர்ந்து ஆட்சியாளரை தெரிவு செய்கின்றனர். ஆகவே ஜனநாயகமும் இஸ்லாத்தின் வழிகாட்டலில் இருந்து முரண்படவில்லை என்பது தெளிவாகிறது.
-Mubarak Abdul Majeed
Post a Comment