BREAKING NEWS

மன்னார் சிலாவத்துறை கடற்படை முகாம் - ஹக்கீம் எதிர்க்கட்சி அரசியல் செய்கிறாரா

மன்னார் சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி முஸ்லிம்களின் காணிகளை பெற்று தரும்படி அமைச்சர் ரஊப் ஹக்கீம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை மூலம் ஹக்கீம் செல்லாக்காசான அமைச்சரா என்பதையும் இந்த நல்லாட்சியிலும் அவர் எதிர்க்கட்சி அரசியல் செய்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிலாவத்துறை கடற்படை முகாமை விலக்கிக்கொள்வது என கடந்த அரசாங்கம் 2007ம் ஆண்டு ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனாலும் முஸ்லிம் சமூகத்தின் பிரதான கட்சிகளின் தலைவர்களாகவும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகவும் ஹக்கீமும் ரிசாதும் இருந்தும் இவர்களால் இதனை வெற்றி கொள்ள முடியவில்லை.  ஆளுமையற்ற இவர்கள் இதற்காக இப்போது கடந்த அரசாங்கத்தை குற்றம் சொன்னாலும் கடைசி வரை அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் செல்லாக்காசுகளாக இருந்து சமூகத்தை காட்டிக்கொடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இப்போது அமைச்சர் ஹக்கீம் தமது கையாலாகா தனத்தை மறைப்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துக்கொண்டு சென்று  பிதமரிடம் அறிக்கை கொடுத்துள்ளமை அமைச்சு அதிகாரம் பெற்ற முஸ்லிம் அரசியலில் வெட்கக்கேடான நிலையாகும்.
இந்த அரசாஙகம் ஏற்படுத்தப்பட்டு நூறு நாட்கள் நெருங்கும் இந்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்pப்பினர் மத்திய அரசில்  அமைச்சுப்பதவியை பெறாமலேயே தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான காணிகளை மீட்டுக்கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சரவையில் சொகுசாக கொலுவீற்றிருக்கும் எமது முஸ்லிம் கட்சித்தலைவர்களான அமைச்சர்களால் ஒரு துண்டு நிலத்தையேனும் மீட்டெடுக்க முடியவில்லை என்றால் இவர்களுக்கு அமைச்சு பதவியை வழங்கினால் போதும் இறுதிவரை வாலாட்டுவார்கள் என்றே இந்த ஆட்சியினரும் இவர்களைப்பற்றி தெரிந்து வைத்துள்ளதாக தெரிகிறது.
ஒரு அரசியல் கட்சி எதிர் கட்சியில் இருந்தால் அல்லது அந்தக்கட்சி பாராளுமன்றத்துக்கு வெளியே இருந்தால் அக்கட்சி அறிக்கை மூலம் மக்களின் கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கும். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறும் ஒரு கட்சி அதுவும் நினைத்த நேரத்தில் எந்த வேளையிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை சந்திக்கும் அதிகாரம் கொண்ட கட்சித்தலைவர் எதிர் கட்சிகளையும் அழைத்துச்சென்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்து அறிக்கை விடுவதன் மூலம் இக்கட்சி ஒன்றில் சுயநல பதவிகளுக்கு அடிமையாகியுள்ள கையாலாகா கட்சியாக இருக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியிடம்  கொஞ்சமும் மதிப்பில்லாத கட்சியாக இருக்க வேண்டும்.
எம்மை பொறுத்த வரை இந்த 100 நாள் ஆயுள் கொண்ட அரசாங்கத்தில் இவர்கள் அமைச்சுப்பதவிகளை பெறாமல் இருந்திருந்தால் தமிழ் கூட்டமைப்பு போல் முஸ்லிம்களின் காணிகளை விடுவித்து கொடுத்திருக்க முடியும். ஆனால் நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலையில் இவர்களால் முஸ்லிம் சமூகம் வெட்கி தலை குணிந்துள்ளது.  இனியாவது இந்த முஸ்லிம் கட்சிகளை ஒதுக்க முஸ்லிம் பொதுமக்கள் முன்வருவது பற்றி சிந்திக்க வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar