BREAKING NEWS

இன்னும் 2, 3 மாதங்களில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் - சுசில் பிரேம்ஜெயந்த்



-எம்.எஸ். பாஹிம்-

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பணிப்புரை வழங்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் எம்.பி. தெரிவித்தார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அமைக்கப்பட்டதை தமது ஆட்சி எதிர்க்கவில்லை என்று தெரிவித்த அவர், அரசியல் வாதி களுக்கு எதிராக அரசியல்வாதிகள் முடிவு எடுப்பதை எப்படி ஏற்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், யாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என அமைச்சரவை உபகுழுவே முடிவு செய்கிறது. சி.ஐ.டி.யும் பொலிஸாரும் எடுக்க வேண்டிய முடிவுகளை இந்த குழு எடுக்கிறது.

பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தொடர்பில் எமக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால் அரசியல்வாதிகள் முடிவெடுப்பதையே தவறு என்கிறோம். குற்றச் செயல்கள் தொடர்பில் இவர்கள் முடிவு செய்வது முற்றிலும் தவறாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைப்பது குறித்து பேசும் ஐ.தே.க. பொலிஸின் பணிகளை கையிலெடுப்பது எப்படி நியாயமாகும்.

எமது எம்.பி.க்களை விளக்கமறியலில் வைத்து தண்டிக்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதே இவர்களின் நோக்கமாகும்.

முழுமையாக வாக்கு மூலங்கள் பெறாமலும் சாட்சியம் பதியாமலும் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்கியது தொடர்பிலே பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்ற சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும். 100 நாள் அவசரத்தில் நினைத்தபடி செயற்படுகின்றனர். இன்னும் 2, 3 மாதங்களில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்றார்.
jaffna muslim

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar