மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாமுடீன்
விரைவில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட கட்சி தலைமைப்பீடம் தீர்மானிக்குமாயின் அதற்கு தயாராகவே உள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாமுடீன் தெரிவித்தார்.
அவர் "சுடர் ஒளி'க்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாரு குறிப்பிட்டார். அவருடனான முழுமையான செவ்வி கீழே தரப்பட்டுள்ளது,
கேள்வி:- உங்களது அரசியல் பிரவேசம் தொடர்பில் விளக்க முடியுமா?
பதில்:- கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் கொள்ளுபிட்டி சென் மைக்கல் கல்லூரியில் ஆரம்ப கல்வியைப் பெற்றேன். பாடசாலை காலம் முதல் சமூக விடயங்களில் மிகவும் ஆர்வமாக பங்கு கொண்ட எனக்கு அக்காலத்தில் பல சமூக அமைப்புக்களுடன் தொடர்பிருந்தது. அது மட்டுமல்லாது பாடசாலை சாரணர் இயக்கத்தில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததுடன் அதனை சிறந்த முறையில் வழிநடத்தியும் இருந்தேன். அதனைத் தொடந்தது பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் அமைப்பொன்றை நிருவி காத்திரமான நடவடிக்கைகளை அதன் மூலம் முன்னெடுத்திருந்தோம்.
ஏழை மக்களுக்கான உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தகம் வழங்கள், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் என பல சிறப்பான திட்டங்களை செய்திருந்தோம்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அராஜகங்கள் செய்யப்பட்டு வந்த போது தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் வகையில் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பல கூட்டங்களை கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தார். அப்போது எனக்கு 17 வயதாகும். அஷ்ரபின் கொள்கைகளை ஈர்க்கப்பட்ட நான் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டேன். அது மட்டுமல்லாது அப்போது முதல் அரசியல் சற்று ஈடுபாடு அதிகமாகவே எனக்கிருந்தது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்படும் போது அதில் அங்கத்துவத்தைப் பெற்ற நான் 2001 ஆம் ஆண்டு கொழும்பில் அமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.
அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைத் தேர்தலின் போது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டேன். முதல் தேர்தலிலே வெற்றி பெற்று மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் கிடைத்த சந்தர்பத்தில் மக்களுக்கு பல சேவைகளை செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை இறைவன் வழங்கியிருந்தான்.
மீண்டும் 2006 ஆம் ஆண்டு மாநகர சபைத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிட்டு முதல் இடத்தைப் பெற்றதுடன் அது எனது சேவைக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரமாகவும் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் என்னை போட்டியிடுமாறு மக்கள் வலியுறுத்தினர். அதிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் எனது சேவையை மேலும் விஸ்தரீப்பதற்கான சந்தர்ப்பமாக அது அமைந்தது. இதன் பின்னர் 2014இல் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிலும் அமோக வாக்குகளை பெற்று மீண்டும் மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.
கேள்வி:- ஒரு தசாப்த காலத்துக்கு மேல் அரசியலில் ஈடுபட்டுள்ள நீங்கள் இரு முறை நகர சபைக்கும், இரு முறை மாகாண சபைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்துள்ளீர்கள்?
பதில்:- நிச்சயமாக கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மக்கள் சேவகனாக இருந்தமையினாலேயே அடுத்து அடுத்து தேர்தல்களில் வெற்றி பெற்றேன். நான் சுயநலவாதியாக இருந்திருப்பின் எனது அரசியல் வாழ்க்கைக்கு மக்கள் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளியை வைத்திருப்பர்.
இந்தக் கேள்வி பொதுமக்களிடம் கேட்டிருப்பீர்களாயின் நான் செய்த சேவைகளை அவர்ளே அடுக்கிக்கொண்டு போயிருப்பர்.
இருப்பினும் குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நான் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சந்தர்பத்தில் எனது பகுதியில் 28 குடும்பங்கள் வீடுகள் அகற்றப்பட்டு கொல்களன்களில் வாழ்ந்து வந்தனர். எனது முதல் அமர்விலேயே இம்மக்களின் துயரை நான் சபையில் எடுத்துரைத்து இறுதியில் அழுது விட்டேன்.
அப்போதைய மாநகர மேயராக இருந்த பிரசன்ன குணவர்தன இது தொடர்பில் கவனம் செலுத்தி அந்தப்பிரச்சினையை நிவர்த்தி செய்து தருவதாக என்னிடம் வாக்குறுதி வழங்கினார்.
அதற்கமைய அம்மக்களுக்கு கொழும்பு 2, சேர்ச் வீதியில் 30 இலக்கத்தில் 28 வீடுகள் கொண்ட மேல்மாடியில வீட்டுத் தொகுதி அமைக்கப்பட்டதுடன் அவை 2006ஆம் ஆண்டு அம்மக்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கியிருந்தோம்.
இது மட்டுமல்லாது பல அபிவிருத்திப் பணிகளையும் எனது பகுதியில் மேற்கொண்டிருந்ததுடன் 2009 ஆம் ஆண்டு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதும். எனது கவனம் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.
அந்தவகையில் அல்இக்பால் வித்தியாலயம், ஸாஹிராக் கல்லூரி(டி.பி.ஜாயா), அல்ஹிக்மா, கிரேன்பாஸ் அல்நஸார் வித்தியாலயம், அல் ஹிதாயா வித்தியாலயம், அவ்ஹிஜ்ரா, தொமட்கொட வீதி கைரியா பாடசாலை உள்ளிட்ட பல பாடசாலைகளின் வளர்ச்சிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன். இன்று இறைவனின் கிருபையால் இப்பாடசாலைகள் நல்ல அபிவிருத்தி அடைந்துள்ளது.
இப்பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தேன்.
கேள்வி:- பொதுத் தேர்தல் ஒன்று விரைவில் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்ற நிலையில் உங்களது எதிர்கால அரசியல் பிரவேசம் எவ்வாறு அமையும்?
பதில்:- புதிய அரசின் 100 நாள் திட்டம் நிறைவடைந்துள்ளமையினால் என்நேரத்திலும் தேர்தல் வரக்கூடிய நிலைக்காணப்படுகின்றது. அனேகமாக விரைவில் பொதுத் தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம் என எண்ணுகின்றேன்.
பொதுத் தேர்தலில் நான் களமிறங்குவது தொடர்பில் எனது தனிப்பட்ட கருத்தை விட கட்சியின் முடிவே மிக முக்கியமாகும். கொழும்பைப் பொருத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனால் நாடாளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.
அதே சமயம் அவ்வாறு தனித்துப் போட்டியிட்டால் முஸ்லிம் வாக்குகள் சிதரடிக்கப்படுவதுடன், கொழும்பு முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிப்படையும். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து நாங்கள் போட்டியிடுமாக இருந்தால் கட்சியில் என்னை தேர்தல் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்குமாயின் நான் போட்டியிடத் தயாராகவே உள்ளேன்.
கேள்வி:- அவ்வாறெனில் தேர்தலுக்கான தயார்படுத்தல்களை செய்து வருகின்றீர்களா?
பதில்:- இந்த விடயத்தில் நான் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதும் மக்களுடன் இருக்கின்றமையினால் மக்கள் பலம் எச்சந்தர்ப்பத்திலும் எனக்குள்ளது. ஆகவே தேர்தலுக்காக பலகோடிகளை இறைத்து போட்டியிட வேண்டிய தேவை என்கில்லை. அதேபோல் தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்கள் மத்தியில் வரும் அரசியல்வாதிகளே தயார்படுத்தல்களில் மும்முரமாக இறங்க வேண்டிவரும்.
கேள்வி:- வில்பத்து விவகாரம் தொடர்பில் உங்களது கட்சித் தலைமை மெளனமான போக்கை கடைப்பிடித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்:- இந்தவிவகாரம் தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாடு சரியானதாகவே நான் கருதுகின்றேன். இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்வது என்பது வங்கலோத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு தனி மனிதனை பலிவாங்கும் நோக்கத்துடனேயே இந்தப் பிரச்சினை பெரிது படுத்தப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தனது சொந்த பூமியிலேயே குடியேற்றப்பட்டுள்ளார்கள். இது வில்பத்து வனத்துக்கு உட்படாத பகுதியாக தற்போது இனவாதிகளே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாங்கள் முஸ்லிம்கள் எமக்கு சுற்றுச் சூழல் தொடர்பில் அக்கறை உள்ளது. ஒரு தாவரத்தை காரணமின்றி அழிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இவ்வாறான நிலையில் அங்கு மீள்குடியேற்றமே இடம்பெற்றுள்ளது.
காடழிப்பு இடம்பெற்றிருக்குமாயின் இதனை அழிக்க முன்னரே சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதுவே அவர்களது கடமையும் ஆகும். இன்னிலையில் தற்போது இதனை பெரிதுபடுத்துவதானது தனிப்பட்ட காரணங்களினாலாகும்.
கடந்த அரசின் பூரண அனுசரனையுடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவதானத்துடனேயே இருக்கின்றது. குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இதனை நாங்கள் பேசுவோம்.
கேள்வி:-அண்மைக்காலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்களை அரசியல் வாதியாக நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்:- முஸ்லிம்களுக்கு எதிராக பல அசம்பாவிதங்கள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது. அரச அனுசரணையுடன் இயங்கிய சிங்கள தேசியவாத இயக்கங்களுக்கு தற்போது அது இல்லாது போயிறுக்கின்றமையினால் அவை செயலிழந்துள்ளது. இருந்த போதிலும் நாங்கள் மிகவும் அவதானத்துடனேயே செயற்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அசம்பாவித சந்தர்பங்களின் போதெல்லாம் நாங்கள் குரல் கொடுத்திருந்தோம். ஆனால் அதனை வைத்து அரசியல் நடத்தவில்லை.
தற்போது மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்து வருகின்றோம். அவர்களுக்காக கோம் எழுப்புவதற்கு அப்பால் உதவி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். தற்போது இந்த விடயத்தில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம்.
அது மட்டுமல்லாது கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது கவ்விப்பிரச்சினையாகும். இதற்காக நாங்கள் கட்சி போதம்களுக்கு அப்பால் பல திட்டங்களை வகுத்துள்ளோம்.
தற்போதுள்ள சமூக சீர்க்கேட்டினால் எதிர்காலத்தில் கலவன் பாடசாலைகள் என்று வரும் போது பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். இதற்காக நாங்கள் தூர நோக்குடன் தாருஸ் சலாம் பாடசாலையை ஆண்கள் பாடசாலையாகவும் அல்ஹிதாயா பாடசாலையை பெண்கள் பாடசாலையாகவும் மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றோம்.
இதனை எமக்கு உடனடியாக மேற்கொள்ள முடியுமாமையினால் எதிர்காலத்தில் தரம் ஒன்றில் மாணவர்கள் சேர்க்கும் போது இந்நடைமுறையை செயற்படுத்தவுள்ளோம். இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்

Post a Comment