தேசிய கல்வி ஆணைக்குழு உத்தியோகத்தர் சந்திப்பில் ஜனாதிபதி
நாட்டின் கல்விக் கொள்கை தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதனை ஊக்குவிப்பது போன்று இனங்களுக்கிடையே நல்லுறவினை விருத்தி செய்யும் அடிப்படை தேவையான தொடர்புசாதன திறமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் மொழிப் பாடங்களை கற்பிப்பதும் விருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி நேற்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய கல்வி ஆணைக்குழு சபையின் உத்தியோகத்தர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியும் கற்பிப்பதில் தற்போதைய நிலைமையைவிட மேலும் பலமான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இவ் ஆணைக்குழு சபையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளைப் போன்று எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தேசிய கல்வி ஆணைக்குழு சபையின் உத்தியோகத்தர்கள் விளக்கமூட்டினர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. அபேபோன் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக்க உட்பட ஆணைக் குழுவின் சபை உத்தியோகத்தர்கள் பங் கேற்றனர்.
Post a Comment