சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் கோரிக்கை விடுப்பதைப் போன்று இரட்டை வாக்குச்சீட்டுமுறை கொண்டுவரப்பட்டால் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கவின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான ஹ¥னைஸ் பாரூக் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கிராமப் புறங்களில் இன்னமும் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறுகிய காலத்தில் மக்களுக்குப் போதியளவு விளக்கமின்றி இரட்டை வாக்குச்சீட்டுமுறை நடைமுறைப் படுத்தப்பட்டால் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துவிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஹ¥னைஸ் பாரூக் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
உத்தேச தேர்தல் மறுசீரமைப்புக்கு சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தமதுயோசனைகளை முன்வைத் துள்ளன.
இரட்டை வாக்குச்சீட்டு முறை நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இவ்வாறான நிலையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல் படுத்துவது சாத்தியமற்றது.
எனவே, பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்திவிட்டு, அதன்பின்னர் கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் திருத்தத்தைக் கொண்டுவர முடியும்.
எனவேதான், பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துமாறு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தற்பொழுது பாராளுமன்றத்தில் முக்கியமான விடயங்கள் எதுவும் விவாதிக்கப்படுவதில்லை. கடந்த வாரம் இரண்டு தினங்கள் அனுதாபப் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பாராளுமன்றத்தைக் கூட்டி ஒரு மணித்தியாலம் சபை அமர்வு களை நடத்திச் செல்வதற்கு மின்சா ரத்துக்கு மாத்திரம் 6 இலட்சம் ரூபா செலவாகிறது.
இதனால் பொது மக்களின் பணமே வீணாக செலவாகிறது.
இவ்வாறு மக்களின் பணத்தை வீணாக செலவிடாமல் பாராளுமன்றம் கலைக் கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மோசடிகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஐ.தே.க எம்பிக்கள் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment