BREAKING NEWS

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் மேற்குலகின் திட்டம் சிக்கலில்........ - உப்புல் ஜோசஃப் பெர்னாண்டோ

.
ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கும் திட்டத்தில் திரைமறைவாக நின்று செயற்பட்ட மேற்குலக நாடுகள், பாராளுமன்ற அதிகாரத்தையும் தமக்குப் பிடித்தவர்களின் கைகளில் கொடுக்கும் திட்டம் கைகூடாமல் திண்டாடுவதாக உப்புல் ஜோசஃப் பெர்னாண்டோ சிலோன் டுடே பத்திரிகையில் எழுதிய பத்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவுகளில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி கையூமை தோற்கடித்து, நஷீடை ஆட்சிபீடமேற்றிய மேற்குலக நாடுகளின் திட்டம், பின்னர் நஷீட்டின் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராஜினாமாச் செய்தபோது தவிடுபொடியானதுபோன்றதொரு நிலைமை, இலங்கையில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டும் மேற்குலகின் திட்டம் சிக்கலில் மாட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மூலம் ஜனாதிபதி சந்திரிகாவை அணுகி, அவரது உதவியுடன் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியாக ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்குவதில் மேற்குலக நாடுகள் பின்னணியில் தீவிரமாகச் செயற்பட்டிருந்தன.
ஆனால், மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியைப் பொறுப்பேற்ற பின்னர், தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சித் தலைவர் என்ற வகையில் செயற்படவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், பாராளுமன்றத் தேர்தல் என்று வரும்போது தமது கட்சியான சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காகவே பாடுபடவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இதனால், மேற்குலகின் திட்டப்படி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தப் பாடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப்போனதொரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபாலவின் வெற்றிக்காகப் பாடுபட்ட ஜாதிக ஹெல உறுமய தனது மேற்குலக எதிர்ப்புக் கொள்கையை இப்போது கடுமையாகத் தூக்கிப் பிடிப்பதால், அது புதிய சிக்கல்களையும் தோற்றுவித்துள்ளது.
இதனால், இலங்கையில் ஒட்டுமொத்த ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் மேற்குலகின் திட்டம் சிக்கலில் மாட்டியிருப்பதாக உப்புல் ஜோசஃப் பெர்னாண்டோ தமது ஆக்கத்தில் குறிப்பிடுகிறார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar