துறைசார் நிபுணர்களே எம்.பிக்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க முடியும்
பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவசர அவசரமாக தேர்தல் மறுசீரமைப்புக்குச் செல்ல முடியாது. எனவே நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை தற்பொழுது நடைமுறையிலுள்ள விகிதாசார முறையில் நடத்திவிட்டு, தேர்தலின் பின்னர் கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்பை நிறைவேற்ற வேண்டும் என ஜே.வி.பியின் அரசியற்குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
விகிதாசார தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையில் ஜே.வி.பி உள்ளதாகவும், இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உரிய முறையிலான தொகுதி நிர்ணயத்தின் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு முன்னர் எம்பிக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது அடிப்படையற்றது எனவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான தமது கட்சியின் யோசனைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிது புதிதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாற்றப்படுவது தொடர்பில் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. இறுதியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் யோசனைக்கு தமது கட்சியின் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொகுதிவாரி முறையை மீண்டும் கொண்டுவருவதாயின் தற்பொழுதுள்ள சனத்தொகைக்கு அமைய மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அது மாத்திரமன்றி எந்த சனத்தொகையின் எண்ணிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்படுகிறார் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். இதனை அரசியல் வாதிகள் தீர்மானிக்க முடியாது. துறைசார் நிபுணர்கள் ஆய்வுகளை நடத்தி அதன் அடிப்படை யிலேயே தீர்மானிக்க முடியும்.
இவ்வாறான நிலையில் தேர்தலொன்றை முகங்கொடுக்கவிருக்கும் தருணத்தில் அவசர அவசரமாக தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவந்து எம்பிக்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது. நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும்.
தொகுதி வாரிமுறை, மாவட்ட விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதாயின் முதலில் எல்லை நிர்ணயம் மற்றும் சனத்தொகையின் என்ன விகிதாசாரத்துக்கு அமைய எம்பிக்களை தீர்மானிக்கப்போகின்றோம் என்ற விடயங்களில் முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் கே.டி.லால்காந்த மேலும் தெரிவித்தார்.
Post a Comment