BREAKING NEWS

விசாரணைப் பொறிமுறை குறித்து அரசாங்கம் வழங்கியுள்ள பதில் பொய்யானது . முன்னாள் ஜனாதிபதி மகிந்த

மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமான அமெரிக்கா கொண்டு வந்துள்ள யோசனைக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் தேசிய விசாரணைப் பொறிமுறை குறித்து அரசாங்கம் வழங்கியுள்ள பதில் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனை தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்லாமல் இணக்கத்துடன் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சாதகமான வகையில் காரம் குறைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

யோசனை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போர் குற்றங்கள் தொடர்பில் அதிகம் கவனத்தை செலுத்தாது, இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் அனுதாபமாக சிந்தித்து, மாற்றங்களை செய்யுமாறு ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் கோரிய போதிலும், யோசனையை முன்வைத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு செவிமடுக்கவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனையின் பந்திகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

யோசனையின் முதல் பந்தியில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடட அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாது, மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தும் சகல பரிந்துரைகளும் அமெரிக்காவின் யோசனையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்க உருவாக்கப்படும் பொறிமுறைக்கு வெளிநாடுகளிடம் இருந்து நிதி மற்றும் பௌதீக உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை செயற்படுத்தப்படுமாயின், புதிய பொறிமுறையின் நீதி ரீதியான மற்றும் வேறு நிறுவனங்களின் ஊழியர்களின் ஊதியங்கள் கூட சர்வதேச வல்லரசுகளால் வழங்கப்படும் நிலைமை ஏற்படும்.

மேலும் அரசாங்கம் போர் குற்றங்களை விசாரிக்க நீதிமன்ற பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் அதில் வெளிநாட்டு நீதிபதிகள், பரிசோதனையாளர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளை கலந்து கொள்ள செய்ய வேண்டும். இதனால், மனித உரிமை பேரவையின் யோசனைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட போவது தேசிய பொறிமுறை என அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிரசாரம் பெய்யாக மாறியுள்ளது.

அத்துடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு படை உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும், நிர்வாக ரீதியான செயற்பாடுகள் மூலம் இவர்கள் படைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவின் யோசனையிலும் கூறப்பட்டுள்ளது.

யோசனையில், இலங்கைக்கு சாதகமான முறையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்வதன் மூலம் அரசாங்கம் நாட்டில் நிலைப்பாடுகளுக்கு எதிரான திசையில் செல்லும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கம் இந்த யோசனையை இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொண்டு அதனை மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்பில் நிறைவேற்ற எண்ணியிருக்குமாயின் இலங்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பரிந்துரைகளை நீக்கி, அந்த யோசனையை இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar