உள்ளுராட்சி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று காலை இலங்கை மன்றத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் கூறியதாவது,
உள்ளுராட்சி மன்றங்கள் பற்றியும் அதன் ஆட்சி பற்றியும் எமது அமைச்சின் மூலம் அடிக்கடி நாம் விளக்கமளித்து வருகிறோம். நாம் உள்ளுராட்சி மன்றங்கள் விடயத்தில் அவற்றுக்கு உதவுவதே எமது அமைச்சின் பொறுப்பாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மேலும் அதிகாரங்களை நாம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். ஜனாதிபதியினதும் அவரது அரசின் நோக்கங்களுக்கமைய செயற்படுவதே எமது நோக்கமாகும். சிலர் நினைக்கிறார்கள் எமது அமைச்சு என்பது எல்லை நிர்ணயம் சம்பந்தமாக பேசுகின்ற அமைச்சு என. அவ்வாறல்ல. எமது அமைச்சின் சேவைகள் பலவாகும். உள்ளுராட்சி மன்றங்களுக்கான வளங்களை பெற்றுக்கொடுப்பது, மனித வளங்களைப்பெற்றுக் கொடுப்பது, உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிப்பதற்கான பலத்தை அளித்தல் போன்றவை எமது அமைச்சுக்குட்பட்டவையாகும்.
ஆகவே இது விடயத்தில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இவை பற்றி பொது மக்களுக்கு தெளிவு படுத்துவது ஊடகங்களின் பொறுப்பாகும். அத்தைகய ஊடகங்களின் சேவைகளை நாம் பாராட்டுகின்றோம் என தெரிவித்தார்.
அதன் பின் இங்கு உரையாற்றிய உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் முன்னாள் உப செயலாளர் டி பி ஹெட்டி ஆராச்சி அவர்கள் உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன அவற்றின் உள்நாட்டு வெளிநாட்டு வரலாறு என்பவற்றை மிக விரிவாக எடுத்துரைத்தார்.
அதனை தொடந்து, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் சட்ட அதிகாரி கயனி பிரேமதிலக்க உரையாற்றுகையில் புதிய உள்ளுராட்சி திருத்தச்சட்டம் பற்றியும் விகிதாசார வட்டார தேர்தல் முறை பற்றியும் விரிசாக விளக்கினார். அத்துடன் 25 வீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இல்லாமல் தனியான பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படுவர் எனவும் கூறினார்.


Post a Comment