நாட்டில் இனவாதத்தை உருவாக்கி மதங்களை தூஷிக்கும் ஞானசாரவை கைது செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உலமா கட்சி முஸ்லிம் தூதுவர்களை வேண்டிக்கொண்டதற்கிணங்க அவர்களால் உடனடியாக ஞானசாரர் என்பவர் கைது செய்யப்பட வேண்டும் எனஅரசுக்கு கொடுத்திருப்பதை உலமா கட்சி வரவேற்கிறது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது,
மஹிந்த காலத்தில் பொது பல சேனாவின் அட்டூழியங்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே உலமா கட்சி மஹிந்தவுக்கான ஆதரவிலிருந்து வெளியேறியது. அதே போல் நவநீதன் பிள்ளை இலங்கை வந்த போது முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றிய அறிக்கையை முதலில் கொடுத்தது உலமா கட்சியாகும். அதே போல் அந்த அறிக்கையை அறபியில் மொழி பெயர்த்து அறபு நாட்டு தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தது.
ஆனாலும் முஸ்லிம்களின் வாக்குகள் பெற்ற முஸ்லிம் கட்சிகளும், பொது மக்களும் மஹிந்தவுக்கு ஆதரவாகவும் உலமா கட்சிக்கு எதிராகவும் இருந்ததால் எமது நடவடிக்கைக்களை அறபு நாடுகள் புறம் தள்ளின.
பின்னர் முஸ்லிம் மக்கள் தாமாக ஒன்று சேர்ந்து மஹிந்தவை வீழ்த்தி நல்லாட்சியை கொண்டு வந்தனர். அப்போதும் நாம் சொன்னோம் இனவாதிகள் உள்ள பகுதியை நம்ப வேண்டாம் என்றும் நல்லாட்சிக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து பேசுவோம் வாருங்கள் என முஸ்லிம்களை பகிரங்கமாக அழைத்தது. ஆனாலும் முஸ்லிம்கள் உணர்வை மட்டுமே வைத்து சிந்தித்தனர். தற்போது மஹிந்த காலத்தை விட மோசமாகி விட்டது என ஒப்பாரி வைக்கின்றனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுடன் ஒட்டியிருந்தும் இனவாதத்தின் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி தரப்பின் அழைப்பை ஏற்று உலமா கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன் வந்த போது கடந்த மே தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் நேரடியாக நாட்டில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை விளக்கியதோடு இனவாதத்தை கக்கி மதங்களை புண்படுத்தும் பொது பல சேனாவை கைது செய்ய வேண்டும் என நேரடியாக கேட்டுக்கொண்டது.
அத்தோடு இராமல் இப்பிரச்சினைகளை அறபு மொழியில் முஸ்லிம் தூதுவர்களின் கவனத்துக்கும் கொண்டு வந்தது.
இந்த முயற்சியின் பலனாக ஞானசார என்பவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். அவ்வாறு நடக்க அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்திபதுடன் இது விடயத்தில் உலமா கட்சியின் அரசியலுக்கு ஒத்துழைத்து உலமா கட்சியை பலப்படுத்த முன் வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

Post a Comment