உடனடியாக உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்த வேண்டும் என சொல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வட்டார முறைப்படியே தேர்தலை நடத்த வேண்டும் என்பதிலும் பிடியாக இருப்பதன் மூலம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாமல் தாமதிக்கும் சூழ்ச்சியாகவே தெரிகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்த வேண்டும் என அர்சுக்கு அக்கறை இருந்திருந்தால் அதனை எப்போதோ பழைய முறைப்படி நடாத்தியிருக்க முடியும். ஆனால் அதனை இழுத்தடிப்பதற்காக வட்டார எல்லை பிரச்சினை, ஆணைக்குழு ஒத்துவராமை என்று பல தந்திரங்களை சொல்லி தேர்தலை இழுத்தடித்தமை மக்களின் ஜனநாயக உரிமை மீறல் மட்டுமல்ல நல்லாட்சி தத்துவத்துக்கும் மாற்றமாகும்.
இவ்வாறு தேர்தல்களை இழுத்தடிப்பதற்கு அவ்வப்போது சிறுபான்மை கட்சித்தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோரும் அரசுக்கு துணை போயினர். புதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு அநீதி என்று சொல்லிக்கொண்டே அந்த முறையை முன்னெடுக்கும் ஐ தே க அரசுக்கும் முண்டு கொடுத்தனர். இத்தகைய முறைக்கு அனுமதிக்க மாட்டோம் என தமிழ் ஊடகங்களில் வீறாப்பு பேசிவிட்டு அரசாங்கத்தின் முன்பு பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனார்கள்.
மஹிந்த அரசு மோசமாக இருந்தது என சொல்லிக்கொண்டே மஹிந்த அரசால் கொண்டு வரப்பட்ட புதிய தேர்தல் முறையை ஐ தே க அரசு தூக்கிப்பிடித்துக்கொண்டு வருவதன் மூலம் மஹிந்த அரசு சரியாகத்தான் இவ்ற்றை செய்துள்ளது என சொல்ல வருகின்றதா?
உண்மையில் உள்ளூராட்சி தேர்தலை நடாத்த வேண்டும் என அரசுக்கு அக்கறை இருந்தால் புதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறையில் தேர்தலை மிக இலகுவாக நடாத்த முடியும். ஆனால் தேர்தல் நடத்தினால் ஐக்கிய தேசியக்கட்சி நாடளாவிய ரீதியில் பாரிய தோல்வியை அடையும் என்ற உண்மையின் காரணமாகவே அரசாங்கம் போலித்தனமான காரணங்களைச்சொல்லி இழுத்தடிக்கிறது. அப்படியொரு அச்சம் இல்லை என்றால் பழைய விகிதாசார அடிபடையில் தேர்தலை உடனடியாக நடாத்த தயார் என பிரதமர் அறிவிக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது

Post a Comment