வடக்கு கிழக்கை இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கிறது என சொல்ல முடியாது என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்ததன் மூலம் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான சூழ்ச்சியில் ஹக்கீம் விலை போய் விட்டார் என்ற எமது கருத்து ஊர்ஜிதமாகி விட்டது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது என அ. இ. மக்கள் காங்கிரஸ் நேரடியாக சொல்லும் போது நீங்களும் அப்படி சொல்கிறீர்களா என ஊடகவியலாளர் கேட்ட போது அவ்வாறு நாம் சொல்ல முடியாது என்று சொன்ன ஹக்கீம் அதற்குரிய காரணத்தை சொல்லாமல் வழமை போன்று சுற்றோ சுற்று என சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன்
வடக்கு கிழக்கு இணைப்பு தமிழ் மக்களின் அபிலாஷை என்றார். இதற்கு குறுக்காக முஸ்லிம் காங்கிரஸ் நிற்காது என்றும் கூறினார். அப்படியானால் முஸ்லிம்களின் அபிலாஷைகள் என்ன என கேட்கப்பட்ட போது அதற்கும் ஹக்கீம் பதில் தராமல் மீண்டும் சுற்ற ஆரம்பித்து விட்டார்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை என்பது வடக்கும் கிழக்கு மீண்டும் இணையக்கூடாது என்பதும் மூவின மக்களும் வாழும் சுதந்திரமான கிழக்கு என்பதுமாகும் என்பது கூட தெரியாத ஒரு முஸ்லிம் கட்சித்தலைவராக ஹக்கீம் இருப்பது கவலை தருகிறது.
வடக்கு கிழக்கை இணைப்பதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு கிடைக்குமா? சிங்கள எம் பீக்கள் ஆதரவளிப்பார்களா என்றெல்லாம் ஹக்கீம் சொல்லியுள்ளார்.
வடக்கு கிழக்கை இணைப்பதால் சிங்கள மக்களுக்கு பெரிதாக பாதகங்கள் இல்லை. மத்தியில் சிங்களவர் ஆட்சி என்பதால் தமக்குரியதை பெற அவர்களால் முடியும். ஆனால் கிழக்கு முஸ்லிம்களுக்குத்தான் பாரிய ஆபத்து என்பது புரியாத கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு எடுப்பது பெரிய விடயம் அல்ல. சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு இரண்டு கோடி கொடுத்தால் கிடைத்தது புண்ணியம் என கையை உயர்த்திவிட்டு போவர் என்பதை கடந்த காலங்களில் நாம் காணவில்லையா?
கோடிகளை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு விரோதமான சட்டங்களுக்கே முஸ்லிம் காங்கிரஸ் கை உயர்த்தும் போது சிங்கள மக்களுக்கு பெரும்பாலும் பாதிப்பில்லாத வடக்கு கிழக்கு இணைப்புக்கு கோடியை வாங்கிக்கொண்டு சிங்கள உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்ற சின்ன யதார்த்தம் கூட ஹக்கீமுக்கு தெரியவில்லை.
வடக்கு கிழக்கு இணைவது சாத்தியமற்றது என்பதாயின் சாத்தியமற்ற ஒன்றுக்காய் ஏன் நேரடியாக பதில் சொல்ல முடியாது? இணைப்பு சாத்தியமில்லை என்பதால் இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவில்லை என சொல்வதற்கு ஏன் தயக்கம். இப்படி சொன்னால் தமிழ் மக்கள் பகைப்பார்கள் என ஹக்கீம் சொல்வது சிரிப்பாக உள்ளது. பிரபாகரனின் கழுத்தை வெட்டும் நிலையில் எனக்கு மரணம் வருமாயின் சந்தோசமாக ஏற்பேன் என்று அன்றைய தலைவர் துணிச்சலாக சொன்னதை விடவா இந்த வார்த்தை தமிழ் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்க போகிறது. வடக்கு கிழக்கும் இணைய வேண்டும் என்பது தமிழ் கூட்டமைப்பின் கருத்து இணையக்கூடாது என்பது முஸ்லிம்களும் கருத்து என்பதை பிரித்தறியும் அறிவு தமிழ் மக்களிடம் நிறையவே உள்ளது.
வடக்கும் கிழக்கும் இபைவது சாத்தியமில்லை என்றால் அது தெரியாமல்தானா தமிழ் கூட்டமைப்பு அதனை வலியுறுத்துகிறது? அப்படியென்றால் அவர்கள் முட்டாள்களா அல்லது சாத்தியமில்லை என சொல்லிவிட்டு வடக்கு கிழக்கு இணைப்புக்கெதிராக பேசாமல் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் முட்டாள்களா?

Post a Comment