BREAKING NEWS

பலத்த காற்று - கடும் மழை காரணமாக கம்பஹாவில் 547 குடும்பங்கள் நிர்கதி ; 230 வீடுகள் சேதம் - ஒருவர் மரணம்



( மினுவாங்கொடை நிருபர் )

   நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடரவுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் சீரற்ற கால நிலை காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் சாரங்கா விதானகே தெரிவித்துள்ளார்.
   இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, ஜா-எல, வத்தளை, களனி, பியகம, மஹர ஆகிய பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள், குறித்த பிரதேச கிராம சேவை அதிகாரிகள் மற்றும் நிவாரணப் பணிக் குழுவினர் ஆகியோரின் ஊடாக தற்போது துரிதமாக  எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

    கடும் மழையுடன் கூடிய பெருங்காற்றின் காரணமாக, கிரிபத்கொடை பிரதேசத்தில் பாதை ஓரத்தில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்  மேல் பாரிய  மரமொன்று வீழ்ந்ததால், அதிலிருந்த களனி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சுசில் சாந்த என்பவர், அதில் நசுங்குண்டு மரணமாகியுள்ளார்.     இவ்வனர்த்தத்தினால், வத்தளை பிரதேசத்தில்  மாத்திரம் 518 குடும்பங்கள்  நிர்கதியாகியுள்ள நிலையில், 167 குடும்பங்களின் வீடுகள் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.  திவுலப்பிட்டிய பிரதேசத்தில்  அனர்த்தத்தினால் இரு குடும்பங்கள் வீடுகளை இழந்து நிர்கதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், ஜா-எல பிரதேசத்தில் 12 குடும்பங்களின் 14 வீடுகளுக்கும், மஹர பிரதேசத்தில் 13 குடும்பங்களின் 14 வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. களனியில் 34 வீடுகளுக்கும், பியகமவில் ஒரு வீட்டுக்கும் பாதிப்புக்கள்  ஏற்பட்டுள்ளன என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar