( மினுவாங்கொடை நிருபர் )
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சராக, (18) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை அமைச்சு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
கடந்த (10) ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ஒன்றிணைந்த எதிரணிப் பக்கத்திலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொள்வதாக இவர் அறிவித்திருந்த நிலையில், கடந்த (15) வெள்ளிக்கிழமை காலை இராஜாங்க அமைச்சர் பதவிக்கான இவரது நியமனக் கடிதத்தை, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
இராஜாங்க அமைச்சராக சில காலம் பதவி வகித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்ன, ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து, அப்பதவியிலிருந்து விலகிச் சென்றிருந்த நிலையில், அவ்விடத்தில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே இவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மஹஜன எக்சத் பெரமுனவின் உறுப்பினரான ஸ்ரீயானி எம்.பி., அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவித அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Post a Comment