( மினுவாங்கொடை நிருபர் )
மினுவாங்கொடை - கல்லொழுவை பிரதேச வாழ் முஸ்லிம் மக்களின் கல்வி முன்னேற்றப்பணி மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அழுத்மாவத்தையில் அமைந்துள்ள முனாஸ் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தை, நவீன முறையில் சம்பூர்ணமாக விரிவுபடுத்தி மீளமைப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்காக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதேவேளை, கல்லொழுவை பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றருக்கான கார்பட் வீதி மற்றும் ஒரு கிலோ மீற்றருக்கான கழிவுக் கால்வாய் அமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கும் அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதுதவிர, கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் முற்ற வெளியை கொங்கிறீட் கற்களினால் சிறந்த முறையில் அழகுபடுத்தி அமைத்துக் கொடுப்பதற்கான பணிப்புரையையும் அமைச்சர் அதிகாரிகளுக்குவிடுத்துள்ளார்.
அத்துடன், கல்லொழுவை முஸ்லிம் பிரதேசத்தில் மிக நீண்ட நாள் குறைபாடாக இருந்து வரும் குடி நீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இப்பிரதேசத்தின் சகல பகுதிகளுக்கும் குடி நீர்க் குழாய்களைப் பொருத்தவும் அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நீர் வழங்கள் வடிகாலமைப்பு நிபுணர் குழுவால் இப்பிரதேச வரைபட எல்லைகள் தற்போது துரிதமாகத் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வரைபட வரைபை மேற்கொள்வதற்கான பணியை ஆரம்பிக்கும் வகையில், குறித்த நிபுணர் குழுவினரால் விரைவில் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும், அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், மினுவாங்கொடை பிரதேச சபைக்கு ஸ்ரீல.மு.கா. சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களான எச்.எம். றபாய்தீன், யூ.எம். இம்தியாஸ் மற்றும் ஏனைய வேட்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, குறித்த அபிவிருத்திப் பணிகளுக்காக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment