- மூதூரில் அமைச்சர் பைஸர் முஸ்தபா
( மினுவாங்கொடை நிருபர் )
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் மாத்திரமே. இத்தேர்தல் மூலம், தமது பிரதேசத்திற்குத் தேவையான சிறந்த ஆளுமையுள்ள ஒருவரைத் தெரிவு செய்துகொள்ள, இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். அந்த ஆற்றல், முதன்மை வேட்பாளர் சரீக்கிடம் உள்ளது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபைக்கு ஜாயா நகர் வட்டார எல்லையிலிருந்து ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிடும் பிரதம வேட்பாளர் ஊடகவியலாளர் கலாநிதி எப்.எம். சரீக் மற்றும் ஏனைய அபேட்சகர்களை ஆதரித்து, மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முதன்மை வேட்பாளர் சரீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் தொடர்ந்தும் பேசும்போது,
மூதூர், தோப்பூர் மண்ணைக் காப்பாற்றுவதற்காக உண்மையும், நேர்மையும், செயற்திறனும் , அனுபவமும் கொண்ட மிக சரியான தலைமைத்துவத்தை மூதூர் பிரதேச சபைக்கு மூதூர் மக்கள் தெரிவு செய்து அனுப்புதல் வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்குகளை அள்ளி வழங்குவதன் மூலமாகவே, இந்நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும்.
ஜனாதிபதியின் தலைமைத்துவம், சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்தமை மிகப் பெரிய பலமாகும். ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், இன்றும் சுதந்திரக் கட்சியினர் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பார்கள்.
இது உள்ளூராட்சித் தேர்தலாக அமைந்தாலும், பிரதேச மட்டத்தில் இம்முறை வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலாகக் கருத முடியும். நாம் எந்தக் கட்சியை ஆதரிக்கின்றோம், எந்த வேட்பாளரை ஆதரிக்கின்றோம் என்பது இங்கு முக்கியமல்ல. பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ள, எதிர்வரும் காலங்களில் மேலும் மேம்படுத்தவுள்ள, அரசாங்க நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமான, ஜனாதிபதியின் தலைமையில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆளுமையுள்ள ஒருவரைத் தெரிவு செய்து கொள்வதே, இச்சந்தர்ப்பத்தில் மிகவும் சிறந்ததென, நான் கருதுகின்றேன் என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment