BREAKING NEWS

சமாதானம் நிறைந்ததாக நத்தாரை அமைத்துக் கொள்வோம்


சமாதானம் நிறைந்ததாக நத்தாரை  அமைத்துக் கொள்வோம்
- நத்தார் வாழ்த்துச்  செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

   இயேசு பாலகன் பிறந்த நன்னாளான இன்றைய நத்தார் திருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும், சமாதானம் நிறைந்த நன்நாளாக அமையப் பிரார்த்திப்பதாக,  தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
   அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
   இயேசு பாலகன், இவ்வுலகில் மக்களுக்கு மத்தியில் சமாதானத்தையே எப்பொழுதும் வேண்டி நின்றார். அதன்படியே அவர் வாழ்ந்தும் காட்டினார். அடுத்தவருக்கு ஒருபோதும் துரோகம், குரோதம், வஞ்சகம் நினைக்க வேண்டாம் என்று, எப்பொழுதும் மக்கள் மத்தியில் உபதேசம் புரிந்தார்.
   மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு எத்தருணத்திலும் உதவி உபகாரங்களைப் புரியவேண்டும் என்பதே, இயேசுவுடைய முழு மூச்சாக இருந்தது.
   எனவே, நாமும் எப்பொழுதும் இயேசுவுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அன்னாரின் சமாதான நல்லிணக்க வழியில் செல்வோமென்றால், அதுதான் நாம் இன்றைய நத்தார் திருநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த முன்மாதிரியாகும். அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் துயர்துடைத்து, அவர்களுக்கும் இயன்றளவு வாழ்வாதார உதவிகளைச் செய்வதும், நாம் இன்று புரியும் மிகப் பெரும் நன்மையான கைங்கரியமாகும்.
   இன்று நாம் புதிய அரசாங்கமொன்றின் கீழ், எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். புதிய பல அபிவிருத்தித்திட்டப் பணிகளையும் மக்களுக்காக முன்னெடுக்கவுள்ளோம். சிறந்த சமுதாயமொன்றை உருவாக்கும் நோக்கில் எமது பணிகள் அமையும்.
   ஆண்டின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நாம், புதிய ஆண்டின் நறுமணத்தையும் இன்னும் ஓரிரு நாட்களில் சுவைக்கவுள்ளோம். இந்த சுவையும், நறுமணமும் நமது வாழ்வில் என்றும் பிரகாசிக்க வேண்டும், மலரவேண்டும் எனக் கூறிக் கொண்டு, அனைவரது வாழ்விலும் செளபாக்கியமும் சமாதானமும் நிரம்பி வழியவேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar