எந்தவொரு நாட்டின் மீதான மோதலுக்கும் எங்களுடைய மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை இராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் இதுவரை சந்தித்திராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மிரட்டி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் உண்டாகுமோ? என்ற அச்சம் அண்டை நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஈராக்கில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக வந்துள்ள அமெரிக்கா படைதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்பதால், உடனடியாக அமெரிக்கா படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என அந்நாடு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா பெரும்பாலான நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இராணுவ வீரர்களை அமர்த்தியுள்ளது.
இந்நிலையில் எந்தவொரு நாட்டின் மீதான மோதலுக்கும் எங்களுடைய மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷா மெஹ்மூத் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் மண்ணை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். பிராந்திய மோதலுக்கான ஒரு பகுதியாக பாகிஸ்தான் இருக்காது.
எந்வொரு ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் ஆதரவாக இருக்காது. பக்கத்து நாட்டில் தீப்பிடித்தால், அதனுடைய வெப்பத்தின் தாக்கத்தை நாங்கள் உணர்வோம்.
ஈரானிடம் பாரம்பரிய ஞானத்தை கடைப்பிடிக்கவும், பிராந்தியத்தின் நலனுக்காக எந்தவொரு அதிகப்படியான நடவடிக்கையை தவிர்க்கவும் நான் வலியுறுத்தினேன்’’ என்றார்.

Post a Comment