ஆட்சி மாற்றத்துக்கான பொதுக் கூட்டணி ; முன்னாள் ஆளுநர்கள் அசாத்சாலி , மைத்திரி, கீர்த்தி ஐ.தே.க.வுடன் சந்திப்பு..!
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றினை கொண்டுவருவதற்கான
பொதுவான கூட்டணியொன்றினை அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்டோர் இதற்கான பேச்சுவார்த்தைகளை பிரதான கட்சிகளுடன் ஆரம்பித்துள்ளனர்.
இந்த பேச்சுக்களை நடத்தும் குழுவில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிரால் லக்திலக, குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்றுள்ள இந்த குழுவினர், பொதுவன கூட்டணி அமைப்பது தொடர்பில் அக்கட்சியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது பொது வேலைத் திட்டம் ஒன்றுக்கான திட்ட வரைபொன்றினை அவர்கள் கையளித்துள்ளனர்.
ஐ.தே.க.ேபிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, செயலர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஐ.தே.க. சார்பில் பங்கேற்றுள்ளதுடன், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் திட்ட வரைபை தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இந் நிலையில் பொதுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள முன்னாள் ஆளுநர்களைக் கொண்ட இந்த விஷேட குழு, அடுத்து வரும் நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகிறது.
Post a Comment