சரோஜா போல்ராஜ் தொடர்பில் சமீபத்தில் வைரலான வீடியோ குறித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் விளக்கம்!
Posted by aljazeeralanka.com on November 04, 2024 in | Comments : 0
சமூக வலைதளங்களில் சரோஜா போல்ராஜ் தொடர்பில் சமீபத்தில் வைரலான வீடியோ குறித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் விளக்கம்!
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முஸ்லிம் கலாச்சார மற்றும் சமூக நெறிமுறைகளை மாற்றுமா?
இந்நாட்களில் சமூக ஊடகங்களில் ஒரு குறித்த வீடியோ வைரலாகி வருவதால், இத்தலைப்பு பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம், 18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் சில சட்டங்களை மாற்றுவது குறித்து "உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் சில பகுதிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோவே ஆகும்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ், சமன்மலி குணசிங்க மற்றும் ஏனைய சிலர் கருத்து தெரிவிக்கும் இக்காணொளியைப் பார்வையிடும் சிலர் இது இந்நாட்களில் அல்லது அண்மையில் நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு என்றே நினைக்கின்றனர். முஸ்லீம் சமூகத்துக்கு மிகவும் முக்கியமான, அதேவேளை உணர்வுபூர்வமான விடயங்களை உள்ளடக்கிய இக்காணொளியின் உண்மை நிலவரத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA), அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பற்றி 2018-2019 காலப்பகுதியில் பாராளுமன்றத்தினுள்ளேயும் வெளியேயும் அதிகமாக கலந்துரையாடப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், சிவில், சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமய தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் பங்களிப்போடு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான சட்ட வரைவை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் திருமணத்தை தடுப்பது மற்றும் 18 வயது வரை கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அதற்கான தமது உடன்பாட்டை தெரிவித்திருந்தனர்.
"உரிமைகளுக்கான பெண்கள்" என்பது குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் ஒரு அமைப்பாகும். இது இனம், மதம், சாதி போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பாகும்.
இன்று சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ள இக்காணொளி, 2019 காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் மேற்கூறிய கலந்துரையாடல் நடக்கும் சூழலில் "உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு நடத்திய ஒரு ஊடக சந்திப்பின் எடிட் செய்யப்பட்ட காணொளி என்பதை முதலில் இங்கே குறிப்பிட வேண்டும்.
இக்காணொளி தொடர்பான தமது தற்போதைய நிலைப்பாட்டை சரோஜா மற்றும் சமன்மலி சகோதரிகள் ஏலவே தெளிவுபடுத்தி விட்டனர்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இதற்கு முன்னரும் அதன் தலைவர்களின் பேச்சுக்கள் தவறான முறையில் அர்த்தம் கொடுக்கப்படும் வகையில் எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டது அனைவரும் அறிந்ததே.
தேசிய மக்கள் சக்தி (NPP) உடன் இணைந்து செயல்படும் ஏறக்குறைய 30 வெவ்வேறு அமைப்புகளில், "உரிமைகளுக்கான பெண்கள்" அமைப்பும் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் "உரிமைகளுக்கான பெண்கள்" அமைப்பின் அனைத்துக் கொள்கைகளும், அனைத்து நிலைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளோ, நிலைப்பாடுகளோ அல்ல என்பது எவரும் புரிந்து கொள்ளும் உண்மையாகும்.
தேசிய மக்கள் சக்தி "வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டு மக்களுக்கு தெளிவாக வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து சமூகங்களினதும் மொழி, கலாசார மற்றும் சமய சார் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி தெளிவுபடுத்தியிருக்கிறது.
சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கியர் ஆகிய எந்தவொரு சமூகம் சார்ந்த சமய கலாசார விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி எந்த விதமான திணிப்புகளையும் மேற்கொள்ளாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அத்தோடு சமய மற்றும் கலாசார விவகாரங்களில் அந்தந்த சமூகத்திலிருந்து எழும் நியாயமான சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை அச்சமூகம் சார்ந்த சமயத் தலைவர்கள், அறிஞர்கள், சிவில் சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினரோடும் கலந்துரையாடி அவர்களுடைய ஒப்புதலைப் பெற்ற பின்னரே தீர்மானங்கள் எட்டப்படும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், இதுவரை எமது நாட்டை அழித்த ஊழல் மற்றும் மேட்டுக்குடி குடும்ப அரசியல் தோற்கடிக்கப்பட்டது. சிங்களம், தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து மக்களும் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நிலைநாட்டும் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. இதனால் இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றிய ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அவர்களுடைய சகாக்களும் இன்று பயம் பீடித்துள்ளது.
ஆகையால் பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுத்திருக்கும் இவ்வேளையில், இதுபோன்ற மிகவும்
உணர்வுபூர்வமான விடயங்களைப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் வெளிப்படும் வகையில்
ஏதோவொரு குழுவும் முன்னெடுக்கும் இவ்வாறான பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல்
புத்திசாதூர்யமாக செயற்படுவது இந்நாட்டை நேசிக்கும் அனைத்து குடிமக்களினதும் பொறுப்பு என்பதை வலியுறுத்தி நிற்கிறோம்.
தேசிய நிறைவேற்றுக் குழு,
தேசிய மக்கள் சக்தி (NPP).
ජාතික ජන බලවේගය
தேசிய மக்கள் சக்தி
JATHIKA JANA BALAWEGAYA (NPP)
OFFICIAL STATEMENT
மீள் பிரசுரம்:
உலமா கட்சி
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment