மலையக சமூகத்தையே புண்பட வைத்துள்ளார் அர்ச்சுனா
Posted by aljazeeralanka.com on February 09, 2025 in | Comments : 0
வரலாறு தொடர்கின்றது
"நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்" இதைவிட ஒரு யாழ்-மேலாதிக்க கொக்கரிப்புகளை வேறு யாரும் கொட்டித்தீர்க்க முடியாது.
கெளரவத்துக்குரிய பதவியிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்கள் என்.பி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாகிய கெளரவ.சந்திரசேகரம் அவர்களை நோக்கி பகிரங்க வீடியோ மூலம் பொது வெளியில் வீசியெறிந்திருக்கும் வார்த்தைகள் இவை.
"வன்னி மக்களா? உவங்க கட்டான்கள், மட்டக்களப்பாரா? அவங்கள் மடையர்கள், முஸ்லிம்களோ? ஐயோ தொப்பி பிரட்டிகள், மலையகமோ அவ கள்ளத்தோணிகளல்லே"என்று காலகாலமாக வக்கணம் சொல்லி ஏனைய அனைத்து சமூகங்கள் மீதும் வெறுப்புணர்வை பரப்பி வந்த யாழ்- பிரதேசவெறிகொண்ட பரம்பரையின் தொடர்ச்சியை அர்ச்சுனா இன்று பிரதிபலித்து நிற்கின்றார்.
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து கப்பலில் வந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மை.மாறாக அவர்கள் ஒரு போதும் நாங்கள் கப்பல் கட்டியவர்கள் என்றோ விசா எடுத்து விமானத்தில் வந்தவர்கள் என்றோ எங்கும் சொல்லித்திரியவில்லையே? அப்படியிருக்க கப்பலில் வந்தவர்கள் என்று அர்ச்சுனா சுட்டிக்காட்டுவதற்கு புதிதாக என்ன இருக்கின்றது?அல்லது இதிலென்ன கேவலம் இருக்கின்றது.
மலையக மக்கள் ஒன்றும் இந்த நாட்டுக்கு திருடர்களாக வரவில்லை. வல்வெட்டித்துறையில் இறங்கி கடத்தல் செய்ய அவர்கள் வரவில்லை. அவர்கள் உழைப்பதற்காக வந்தவர்கள். அவர்களின் உழைப்பில்தான் இலங்கை வளம்பெற்றது. நாம் அந்நியச்செலாவணியைக் கண்டோம்.பொருளாதாரம் செழித்து வளர்ந்தது. அதன்பலனாகவே இலவசக்கல்வி போன்ற சமூக நீதித்திட்டங்கள் சாத்தியமானது. அந்த இலவசக்கல்வியில்தான் அர்ச்சுனாவும் படித்து டாக்டரானார்.
அர்ச்சுனாவின் பார்வையில் தேசம் கடந்து பிழைக்கச் செல்வது கேவலமானது என்றால் இன்று உலகெல்லாம் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வும் கேவலமானதுதான். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்புதான் அர்ச்சுனா போன்றவர்கள் போற்றிப்புகழும் புலிகளுக்கு கோடான கோடி செல்வங்களை வாரிவழங்கியது. அதுமட்டுமல்ல நாடோடிப்பிழைப்பது ஒன்றும் யாழ்ப்பாணத்துக்கும் புதியதல்ல. மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று மாட்டுவண்டியோட்டிப் பிழைத்தவர்கள்தான் அர்ச்சுனா பெருமையாக பீற்றிக்கொள்ளும் 'யாழ்ப்பாணத்தார்' ஆகும்.
அர்ச்சுனா அடிக்கடி கோடிட்டுக்காட்டும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தந்தை தொல்புரம் ஜேம்ஸ் விசுவநாதன் வேலுப்பிள்ளை மட்டுமல்ல பிரபாகரனின் பாட்டனாரான திருவேங்கடத்தாரின் மூதாதையரும் ஏன் அமிர்தலிங்கத்தரின் தந்தை அப்பாப்பிள்ளை கூட மலேசியா சென்றுதான் தம் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள். இவற்றை இங்கே சுட்டிக்காட்டுவது எந்தத் தொழிலையுமோ,யாரையுமோ தரம் தாழ்த்தும் நோக்கிலல்ல. அர்ச்சுனா போன்றவர்களுக்கு வரலாற்றுப் பாடம் புகட்டுவதற்கு மட்டுமேயாகும்.
இந்நிலையில் சந்திரசேகரம் போன்றவர்களை அரசியல் ரீதியாக விமர்ச்சிப்பதற்கு பதிலாக கீழ்த்தரமான வார்த்தைகளுடன் அவரை எதிர்கொள்ள முனைவது அவரது தற்குறித்தனமான அரசியல் வங்குரோத்துத் தனத்தில் வெளிப்பாடாகும். இத்தகைய பேச்சுக்கள் இவரைப் போன்றவர்களை தேர்தலில் ஆதரித்து நின்ற அனைவரையும் வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரசேகரத்தை கேவலப்படுத்துவதாக எண்ணி அநாகரீகமும் அருவருப்பும் நிறைந்த வார்த்தைகளால் அவரை மட்டுமல்ல மலையக சமூகத்தையே புண்பட வைத்துள்ளார் அர்ச்சுனா.
இதுகுறித்து அனைத்தும் அரசியல் முற்போக்கு சக்திகளும் அவருக்கு பகிரங்க கண்டனங்களை தெரிவிக்க முன்வரவேண்டும்.
MR Stslin
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment