பன்னிரண்டு நாள் யுத்தத்தில் வெற்றி தோல்வி யாருக்கு
Posted by aljazeeralanka.com on June 27, 2025 in | Comments : 0
ஒருவரின் பலத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் ஏற்படும் ஆபத்து மிகக் கொடூரமானது.....
அண்மைய பன்னிரண்டு நாள் யுத்தத்தில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை காட்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் கற்றுக் கொண்ட பாடத்தை வரலாறு எழுதி வைக்கத்தான் போகிறது. இந்த யுத்தம் உலகத்திற்கு “யாரையும் குறைத்து மதிப்பிடுவது என்பது மகா முட்டாள்தனம்” என்ற உண்மையை உரத்துச் சொல்லி இருக்கிறது. அத்துடன் தத்தமது பலம் பலவீனம் என்பவற்றை சுய மதிப்பீடு செய்யும் ஒரு ஒத்திகையாகவும் அமைந்தது என்றும் கூறலாம்.
பதின்மூன்றாம் திகதி வெள்ளியன்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 200 யுத்த விமானங்களும் ஈரானில் நடாத்திய தாக்குதலும், அணு விஞ்ஞானிகள் மற்றும் படைத்தளபதிகளின் உயிரிழப்புக்களும் இஸ்ரேலுக்கு பாரிய வெற்றியாகும் என்பது உண்மைதான். அது போலவே மொசாட் அமைப்பு ஈரானுக்குள் ஊடுருவி அந்த நாட்டின் இராணுவ உட்கட்டமைப்பை நுணுக்கமாக மோப்பம் பிடித்து பாரிய தாக்குதலை ஏற்படுத்தும் வரை ஈரானிய புலனாய்வுத் துறையும் படைத்தரப்பும் தூங்கிக் கொண்டிருந்ததும் மறுக்க முடியாத ஒரு இயலாமை என்பதையும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
இஸ்ரேலின் ஆரம்பக்கட்ட தாக்குதல் பெற்றுக் கொடுத்த வெற்றி மூன்று தினங்களுக்குள் ஈரானின் அணு உலைகளை தகர்த்துவிட்டு அதன் ராணுவ கட்டமைப்பை துவம்சம் செய்த பின்னர் ஈரானிய ஆட்சியையும் அகற்றி தமக்கு ஏற்றவாறு ஒரு தலையாட்டி பொம்மையை ஆட்சி பீடத்தில் அமர்த்திவிட்டு மத்திய கிழக்கின் முழுமையான கட்டுப்பாட்டை தமது கரங்களுக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற நப்பாசையில் தான் இஸ்ரேலும் அமெரிக்காவும் களத்தில் இறங்கி இருக்க வேண்டும். அதாவது முன்னர் ஈராக்கில் மேற்கொண்டது போல ஒரு விமானத் தாக்குதலும் பின்னர் தரை மார்க்கமாக முன்னேறுவதும் போர் வியூகமாக இருந்திருக்கலாம். ஈரான் மீதான முதல் நாள் தாக்குதலைத் தொடர்ந்து சில மணி நேர அமைதியின் பின்னர் ஈரானிய ஆயுதப்படைகளுக்கான இமாம் கொமேய்னியின் உத்தரவும் அதனைத் தொடர்ந்து சரமாரியாக இஸ்ரேலிய நகரங்களுக்குள் பொழியப்பட்ட விதவிதமான ஏவுகணைகளின் அதிர்வுகளும் அழிவுகளும் உலகத்தின் கண்களை திறக்கச் செய்தன.இஸ்ரேலிய வான் பாதுகாப்பு கவசங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டு தொடர்ச்சியாக செலுத்தப்பட்ட ஏவுகணைகள்
நெட்டான்யாஹு மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு அதிர்ச்சி வைத்தியமாக மாறியது. அதனையும் தாண்டி தொடர்ச்சியாக இடம்பெற்ற இஸ்ரேலிய நகரங்கள் மீதான சில மணி நேர தாக்குதல் காரணமாக அதிக எண்ணிக்கையிலான இஸ்ரேலிய மக்கள் பக்கத்து நாடான சைப்பிரசுக்கு குடி பெயர்ந்தார்கள். ஆனால் காசா மீதான இரண்டு வருட தாக்குதல்களால் காசா மக்கள் உயிர் போனாலும் சொந்த மண்ணிலயே வீர மரணம் அடைய வேண்டும் என்று அங்கேயே இருந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஈரான் எனப்படும் பண்டைய பாரசீகம் மீண்டும் உலக அரங்கில் வலிமையுள்ள விவேகம் நிறைந்த போர்த்தந்திரம் மிக்க ஒரு தேசம் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், பூகோளவியல், வான சாஸ்திரம், கணிதவியல் போன்ற துறைகளில் ஈரானியர்களின் சாதனைகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. ஈரானின் சொந்த தயாரிப்புகளான அவர்களது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இஸ்ரேலின் நகரங்களை மட்டுமல்ல அமெரிக்க நகரங்களைக் கூட இலக்கு வைக்கும் அளவுக்கு அது பயணிக்கும் தூரமும் தாக்குதிறனும் அபார சக்தி கொண்டவவை என்பதை அமெரிக்கா முதன்முறையாக கண்டிருக்க வேண்டும். அதனால் தான் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கதறிக் கொண்டிருந்தார். மக்களை தெஹ்ரான் நகரை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தார். ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கொமெய்னியை சரணடையுமாறும் அவர் கட்டளையிட்டார். இவைகளை கொஞ்சமும் கணக்கில் எடுக்காத ஈரானிய ராணுவமும் தேசிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையும் தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேலிய நகரங்களில் தொடர்ந்தும் பரவலாக நடாத்திக் கொண்டிருந்தன. இஸ்ரேல் பார்க்கும் இடமெல்லாம் இலக்கு வைக்கப்பட்டு பாலைவனமாக மாறியது. உலகில் அனேகமான நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ள மொஸாட் அமைப்பின் தலைமை அலுவலகம் அதி சக்திவாய்ந்த ஏவுகணை மூலம் தகர்த்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவமானது இஸ்ரேலியர்களால் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத ஒன்றாகும். அன்று எத்தனை பேர் அங்கு கடமையில் இருந்திருப்பார்கள் என்பது வெளியே வராத செய்திகள். ஆனாலும் 29 பேர் மரணம் என்றும் 3400 பேர் காயமடைந்தார்கள் என்றும் இஸ்ரேலிய தரப்பில் கூறப்பட்டது. அங்கு இடம் பெற்ற பேரழிவை கண்டு இஸ்ரேலிய அதிபர் கண்ணீர் சிந்திய காட்சி உலகின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். கடந்த பதினைந்து வருடங்களாக இஸ்ரேலில் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு அந்த நாட்டின் ஒப்பற்ற காவலராக மக்களின் புகழ்ச்சிக்குட்பட்டிருந்த நெட்டான்யாஹு 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிய ஆகாய எல்லையை தாண்டி அதன் பாதுகாப்பு அரண்களை தகர்த்துக் கொண்டு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பிரதமரின் பிரபல்யம் மக்கள் மத்தியில் செல்லாக்காசாக மாறியது. காசாவில் அவர் மேற்கொண்ட சில்லறைத்தனமான தாக்குதல்களும் பசியால் பட்டினியால் வாடிய காசா மக்களுக்கு போய் சேர வேண்டிய உணவு வண்டிகள் மற்றும் லொறிகளை தடுத்து நிறுத்தியதும் ஹஜ் பெருநாள் தினத்தன்று பசியின் அகோரத்தினால் உணவுக்காக வரிசையில் நின்றிருந்த சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நாற்பதுக்கும் அதிகமானோரை சுட்டுக் கொன்றதும் மனிதாபிமானம் மிக்க உலக மக்கள் எவராலும் மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும். ஒரு போர்க் குற்றவாளியாகவே நெட்டன்யாஹுவை ஏற்கனவே சர்வதேச நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது. அதேபோல உள்நாட்டில் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் அவர் பிரதமர் பதவியை இழக்கும் நிலை அங்கு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையை சீர் செய்வதற்காகவே இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல இஸ்ரேலிய மக்கள் மத்தியிலும் மீண்டும் அவர் ஹீரோவாக வருவதற்கான முயற்சியில் இறங்கினார். அதன் பிரதிபலிப்பே ஈரான் மீது திட்டமிடப்பட்ட இவ்வாறான ஒரு தாக்குதல் ஆகும். மூன்றே நாட்களுக்குள் தனது படைப் பலத்தை பிரயோகித்து ஈரானின் அணு உலைகளை அளித்து இராணுவ கட்டமைப்பை தகர்ப்பதே அவரது இலக்காக இருந்தது. அதற்காக அமெரிக்க அதிபரின் அங்கீகாரத்தையும் அவர் பெற்றுக் கொண்டார். இவரது திட்டங்கள் அனைத்தும் தப்பான கணக்கு என்பதை ஈரானிய தேசம் நிரூபித்துக் காட்டியுள்ளது.
சர்வதேச அரசியல் மற்றும் யுத்த ஆய்வாளரான ஜோசி மெல்மன் என்பவர் தனது அண்மைய கட்டுரை ஒன்றில் இஸ்ரேல் நாட்டையும் அதன் பிரதமரையும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் வர்ணித்துள்ளார். உலகின் மிக ஆபத்தான மனிதர்கள் அவர்கள் என்றும் நயவஞ்சகத்தனம் கொண்டவர்கள் என்றும் பேச்சுவார்த்தை என்ற நாகரீகம் தெரியாதவர்கள் என்றும் அவர் எழுதியிருக்கின்றார். இஸ்ரேல் படைப்பிரிவில் இருந்து ஈரானுக்குள் ஊடுருவிய சிலர் 36 மணி நேரத்துக்குள் நாற்பது பேரை கொலை செய்தார்கள். அதி உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தி இரக்கமற்ற முறையில் கொலை செய்யும் ஒரு கலாச்சாரம் உள்ள நாடு இஸ்ரேல் என்று அந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கின்றார். Begosource எனும் software ஐ புலனாய்வுச் சாதனமாக இஸ்ரேலியர்கள் பயன்படுத்தி உயிருள்ள ரோபோக்கள் போன்று மொஸாட் அணியினர் தாக்குதல் நடத்தும் பாணியை அவர் தனது கட்டுரையில் விபரித்துள்ளார்.
2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை ஈரானின் ஆறு அணு விஞ்ஞானிகள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். 1979 ஆம் ஆண்டு இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சியின் பின்னர் இருபது வருடங்கள் ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவுற்று காணப்பட்டது. இவைகளையும் மீறி ஈரானிடம் எண்ணை கொள்வனவில் ஈடுபட்ட ஏனைய நாடுகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பொருளாதாரத் தடை விதித்து அவர்களையும் தண்டித்தார்கள். அந்த அளவுக்கு ஈரானுடைய பொருளாதாரம் மிகக் கீழ் மட்டத்துக்கு இவர்களால் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தையும் தாண்டி ஈரான் தனது சொந்தக் காலில் நின்று அதி உயர் தொழில்நுட்பங்களை நாட்டில் உருவாக்கி வியத்தகு நவீன ஆயுதங்களின் உற்பத்தியையும் அதன் அணு தேவைக்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது. அதே வேளை மூன்றாம் உலக நாடுகளுக்கு பாரிய உதவிகளையும் அது மேற்கொண்டு வந்தது. இலங்கைக்கு ஈரான் வழங்கிய உதவிகளை பிரபல ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விபரித்திருந்தார்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் தயாரிக்கும் அனைத்து வகையான ஆயுதங்களை விடவும் உலகில் வேறெந்த நாட்டிடமும் அதனை விட தரமான ஆயுதங்களோ அல்லது அதற்கு இணையான ஆயுதங்களோ இருக்கவே கூடாது என்பதில் இந்த நாடுகள் எப்போதும் குறியாக இருந்து வருகின்றன. ஆனாலும் சீனா, ரஷ்யா, வடகொரியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அணு ஆயுத ஆற்றலை இது வரைக்கும் தடுக்க முடியாத அவல நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.
மத்திய கிழக்கில் ஈராக்கிய தேசம் ஒரு காலகட்டத்தில் பலமிக்க நாடாக மாறிக் கொண்டிருந்ததை சகிக்க முடியாமல் தான் அந்த நாட்டுக்குள் பேரழிவை உண்டு பண்ணும் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் பலவந்தமான ஒரு படையெடுப்பை நடத்தி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கிய மக்களை கொன்று குவித்து ஈராக்கிய தலைவர் சதாம் ஹுசைனை கைது செய்து தூக்குத் தண்டனை விதித்து தமக்கு சாதகமான அமெரிக்க சார்பு அரசொன்றை அங்கே ஸ்தாபித்துச் சென்றார்கள். அதுபோன்று ஆபிரிக்க பிராந்தியத்தில் லிபியா ஒரு பலம் மிக்க நாடாக மாறிக் கொண்டிருந்தது. அந்த நாடு பெரும் ஆபிரிக்க வல்லரசாக மாறலாம் என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் கூலிப்படைகளைக் கொண்டு லிபியா தாக்கப்பட்டதுடன் லிபிய ஜனாதிபதி கர்ணல் கடாபியும் கொல்லப்பட்டமையானது இந்த பிராந்தியத்தில் மேற்குலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட மற்றுமொரு கறையாகும். அதே பாணியில் தான் ஈரானிலும் அவர்களுக்கு ஒரு அச்சமும் சந்தேகமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் ஈரான் அணுகுண்டுகளை தயாரித்து விடும் என்ற கதை இவர்களால் பல வருடங்களாக பேசப்பட்டு வரும் ஒரு பாரிய குற்றச்சாட்டாகும். இத்தனைக்கும் இஸ்ரேல் எத்தனையோ வகை வகையான அணு ஆயுதங்களை தம் கைவசம் வைத்துக் கொண்டு சர்வதேச அணுப்பரம்பல் தடைச் சட்டம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவரும் ஒரு நாடு என்பது வேறு கதையாகும்.
ஈரான் இந்த யுத்தத்தில் பயன்படுத்தி இருக்கும் ஆயுதங்களும் ஏவுகணைகளும் உலகின் எந்த நாட்டிடமும் இல்லாத மாறுபட்ட ஒரு உள்நாட்டு உயர் தொழில்நுட்பம் என்பதை இப்போது அவர்கள் ஒப்புக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றார்கள். ஆயுத பலத்திலும் தொழிநுட்பத்திலும் இவ்வளவு பலம் பொருந்திய ஒரு நாடாக ஈரான் இருக்கும் என்று இவர்கள் கற்பனையிலும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எந்த அளவுக்கு ஈரானுடைய தொழிநுட்பம் முன்னணி வகிக்கின்றது என்றால் ரஷ்ய - யுக்ரேன் யுத்தத்தில் ரஷ்யா பயன்படுத்தும் அதிநவீன ட்ரோன்கள் அனைத்தும் ஈரானிய தயாரிப்புகளாகும். துல்லியமாக இலக்குகளைக் குறி தவறாமல் தாக்க கூடிய அபார சக்தி வாய்ந்தவை அவை. இவற்றில் சில தற்கொலை தாக்குதல் அணியாகவும் செயற்படக்கூடியவை. இவை அனைத்தும் ஈரானிடம் இருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன.
ஈரானில் உள்ள அணு உலைகளை குறி வைத்து தாக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட B2 ரக குண்டு வீச்சு விமானங்கள் அனைத்தும் அமெரிக்காவில் இருந்தே புறப்பட்டு பதினெட்டு மணி நேரம் தொடர்ச்சியாக பறந்து பல டன் கணக்கான குண்டுகளை சுமந்து வந்து ஈரானின் வெற்றுத்தரையில் வீசி விட்டு திரும்பியிருப்பதாகவே ஈரானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட் செலவிலும் பணச்செலவிலும் இவ்வளவு தூரம் பறந்து வந்தும் கூட குறிப்பிட்ட இலக்கை அவர்களால் தாக்க முடிவு முடியவில்லை என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள பெரும் ஓட்டைகளாகவே நோக்கப்படுகின்றது. தாக்குதல் நடைபெற்ற குறித்த இடங்களில் இருந்த அணு உலைகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதமளவில் இடமாற்றப்பட்டதாக ஈரானிய அரசு கூறுகின்றது. அமெரிக்காவுக்கு இது பலத்த ஏமாற்றமும் பெரும் நஷ்டமும் ஆகும். அமெரிக்க மக்களை திருப்திப் படுத்தலாம் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கனவு இதில் கைகூடவில்லை. இஸ்ரேலின் பேச்சை நம்பியே தான் ஏமாற்றப்பட்டதனால் நெட்டான்யாஹுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தூசன வார்த்தைகளால் திட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் நெட்டென்யாஹு ட்ரம்பை பாராட்டிய விவகாரம் தான் இன்னும் சிறிது காலத்திற்காவது இஸ்ரேலின் பிரதமராக பதவி வகிக்க ட்ரம் உதவி இருக்கின்றார் என்ற திருப்தியை தவிர வேறு எதுவும் இதில் கிடையாது. ஆனாலும் இஸ்ரேலில் இடம்பெறவுள்ள தேர்தலில் நெட்டென்யாஹு தோல்வி அடைவார் என்று “நியூயோர்க் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. இதே வேளை ஈரான் மீண்டும் அணு உற்பத்தியில் ஈடுபட வேண்டுமானால் இன்னும் பத்து வருடங்கள் தேவை என்று ட்ரம்ப் கூறி இருக்கின்றார். ஒரு வருடம் போதுமானது என்று நெட்டான்யாஹு குறிப்பிட்டுள்ளார். இரண்டே இரண்டு மாதங்களில் ஈரான் தன்னை சுதாகரித்துக் கொண்டு வலிமைமிக்க நாடாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
ஈரானை தாக்கும் விடயத்தில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் அனுமதியை பிரதமர் நெட்டான்யாஹு பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் அமெரிக்க காங்கிரசின் அனுமதியை அதிபர் ட்ரம்ப் பெற்றுக்கொள்ளத் தவறி விட்டதாகவும் அந்த இரண்டு நாடுகளிலும் பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனநாயக கட்சியின் இளம் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் டொனால்ட் ட்ரம்ப் காங்கிரசின் ஒப்புதல் பெறாமல் தாக்குதல் நடத்திய விவகாரம் அவருக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணை Impeachment கொண்டு வருவதற்கு போதுமானது என்று கூறியுள்ளார்கள். இந்த பன்னிரண்டு நாள் யுத்தத்தில் ஈரான் தோல்வி கண்டு துவண்டு போயிருந்தால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் அவர்களின் இராணுவ தலையீட்டை குற்றமாக காணாமல் வெற்றி வாகை சூடி கொண்டாடி இருப்பார்கள். ஈரானின் துணிச்சலும் நவீன தொழில்நுட்பம் அடங்கிய புதிய கண்டு பிடிப்புகளும் கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க தளத்தின் மீதான அவர்களின் துணிச்சலான ஏவுகணைத் தாக்குதலும் உலக ஒழுங்கு மாறிவிட்டது என்பதை கூறி நிற்கின்றன.
தற்போது அமுலில் இருக்கும் யுத்த நிறுத்தத்திற்கு கூட உடன்படாத ஈரானை கெஞ்சி மன்றாடியே ஒரு இணக்கப்பாட்டிற்கு சம்மதிக்கச் செய்தார்கள் என்பதும் சர்வதேச ஊடகங்களில் பேசப்படும் மற்றும் ஒரு செய்தியாக உலாவுகிறது. எது எப்படி இருந்த போதிலும் ட்ரம்பின் இந்த வருட சமாதானத்திற்கான நோபல் பரிசுக் கனவு சிதைந்து விட்டது போலவே தோன்றுகிறது. அண்மையில் இந்திய பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்ட யுத்த சூழ்நிலையை தவிர்க்க அமெரிக்க ஜனாதிபதி எடுத்த முயற்சி ஆக்கப்பூர்வமான அமைதி வழிக்கான ஒன்றாக உலகத்தால் பார்க்கப்பட்டது உண்மைதான். அதனால் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் விருதுக்காக பரிந்துரை செய்யும் வாய்ப்பும் இருந்தது. இருந்த போதிலும் இந்த பன்னிரண்டு நாள் போரில் உள்நாட்டில் அவருக்கு எதிராக கிளர்ந்த மக்கள் போராட்டமும் அதிருப்தியுமே இந்த யுத்த நிறுத்தத்திற்கான அடிப்படையாக அமைகின்றன. அத்துடன் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க தளங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டால் அங்கிருக்கும் சுமார் ஐம்பதினாயிரம் அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறும் என்பதும் யுத்த நிறுத்தத்திற்கான மிக முக்கியமான காரணிகளாகும்.
இந்தப் போர் இன்னும் நீடித்திருந்தால் இதற்குள் வடகொரியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் களத்தில் இறங்குவதற்கும் ஈரானுக்கு அவை உதவுவதற்கான சாத்தியமுமே அதிகமாக இருந்தது. அவ்வாறு யுத்தத்தின் போக்கு விரிவடைந்து சென்றிருந்தால் அது ஒரு மூன்றாம் உலகப் போராகவே மாறி உலகை அழித்து விடும் வாய்ப்பே இருந்தது. வல்லரசுகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் ஒரு யுத்த சூழல் ஏற்படுமானால் அது படைப்பலம், பொருளாதார வளம், ஆட்பலம், அனைத்தையும் தாண்டி அதிஉயர் தொழிநுட்ப அறிவின் உச்சத்திலேயே அதன் வெற்றி தோல்விகள் அமையலாம்.....
உமர்லெப்பை யாக்கூப்,
ஒலி/ஒளிபரப்பாளர்,
சிரேஷ்ட ஊடகவியலாளர்.
27 ஜூன் 2025.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment