17 வயது பெற்றோருக்கு 03 ஆம் திகதி வரை விளக்கமறியல்
Posted by aljazeeralanka.com on October 02, 2025 in | Comments : 0
களியோடைப் பாலத்திற்கு அருகில் குழந்தை மீட்கப்பட்டதாக செய்தி பரப்பி விடயத்தை திசை திருப்பிய 17 வயது பெற்றோருக்கு 03 ஆம் திகதி வரை விளக்கமறியல்
-------------------------------------
ஒலுவில் பகுதியில் களியோடைப் பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் நாளை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (01) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்கமாறு உத்தரவிடப்பட்டது.
17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் மீட்கப்பட்ட பெண் குழந்தையை திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) பெற்றெடுத்தனர்.
இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடபட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒலுவில் பிரதேசத்தை அண்டிய களியோடைப் பாலத்திற்கு அருகில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்ததாக செய்தி ஒன்று வேகமாக பரவியிருந்தது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று முன்தினம் (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று ”எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் என்னிடம் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு சென்றுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த உறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப்படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக செய்தி பரவியது.
இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment