பாலஸ்த்தீனத்துள் உண்மையான அமைதி ஏற்படவில்லை ;
Posted by aljazeeralanka.com on October 12, 2025 in | Comments : 0
பாலஸ்த்தீனத்தின் காசா பள்ளத்தாக்கில் -கரையோர வலயத்தில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது !
இது ஒரு திருப்புமுனை வியூகந்தாம் .
ஆனால் , இன்னும் உண்மையான அமைதி பாலஸ்த்தீனத்துள் ஏற்படவில்லை ; காசாவுக்கான போர் நிறுத்தம் காலவரையறையின்றி நீடிக்குமா? இஸ்ரேல் யுத்தமின்றி உயிர்வாழுமா , அதன் இன்றைய அரசாங்கம் நீடிக்குமா ? இஸ்ரேல் அரசு நாசகார ஆயுதக் கொள்வனவை நிறுத்துமா கூடவே , காமாஸ் அமைப்புத் தன் ஆயுதங்களை களைவதற்கு ஒப்புக்கொள்ளுமா? அழித்துத் தரைமட்டமாகிய காசாவை யார் ஆளுவார்கள்? இக் கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை !
அமெரிக்க அதிபர் தொன்னால்ட்டு துரும்பின் சமாதானத் திட்டத்துடன் இஸ்ரேல் -காமாசு போர் நிறுத்தத்துக்கு இணங்கி நடப்பதைக் கண்காணிக்கும் சர்வதேசப் படையில் 200 அமெரிக்கப் படைகளும் உள்ளடக்கம் என்று அறிய முடிகிறது .
நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்குப் போர் நிறுத்தம் சட்டரீதியாக நடைமுறைக்கு வந்துவிட்டது. உள்ளூர் நேரப்படி நண்பகலில், இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பாலஸ்த்தின் காசா கரையோர வலயத்தின் மீதான விமான/ ஷெல் தாக்குதலை நிறுத்தியதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது . இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோடுகளுக்கு பின்வாங்கிவிட்டதாகவும், பேரழிவிற்குள்ளான காசாப் பள்ளதாக்குக் கடலோரப் பகுதியில் முக்கிய வீதிகள் -பாதைகள் , ஒழுங்கைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்த செய்தி சரியானதுதாம் என்பதை நாம் அல் ஜசீராத் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருக்கிறது ! காசா நகரத்தை நோக்கியும் , கடற் கரைகளை நோக்கியும் பெருந்தொகையான பாலஸ்த்தீனியர்கள் கால்நடையாகவும் , வாகனங்களிலும் அணிவகுத்துச் செல்லும் காட்சிகளைக் காணமுடிகிறது .
போர்நிறுத்தம் குறித்துப் பாலஸ்த்தீன மக்களின் மகிழ்வும் , கொண்டாட்டமும் எவ்வளவு அரியதாக இருந்தாலும், ஏமாற்றமும் இதனுடன் கூடப் பிறந்ததுவே ; பாலஸ்த்தீனம் இன்னும் விடுதலையாகவில்லை !
இஸ்ரேலின் அதி தீவிர வலதுசாரி அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகுதான் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதென அறிகிறோம் . பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு இஸ்ரேலியப் பாசிச அரசாங்கம் மீண்டும் , குண்டுவீச்சைத் தொடங்கும் என்று அஞ்சிய காமாஸ் இயக்கமானது , அமெரிக்கா, துருக்கி, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளிடமிருந்து போர் முடிந்ததற்கான /நிறுதத்திற்கான "உத்தரவாதத்தை ,உறுதிப்பாட்டை" கோரிப் பெற்றதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது .
இருநூறு அமெரிக்க ஏஆகாதிபத்திய இராணுவத்தினரும் கூடவே பங்கேற்கும் ஒரு சர்வதேச "கண்காணிப்புப் பணிக்குழு" போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் என்று ஜேர்மனிய ஊடகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் நாளை மறுதினம் திங்களன்று இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளார்.
உதவி விநியோகத்திற்காக பாலஸ்த்தீனத்தின் பகுதியான காசாவிற்குள் அமைந்த அனைத்து எல்லைக் கடவைகளையும் உடனடியாகத் திறக்குமாறு இஸ்ரேலுக்கு ஐ.நா அழைப்பு விடுத்ததுள்ளது . அக்டோபர் 7, 2023’ஆம் ஆண்டு , ஒக்டோபர் மாதம் 7’ஆம் தேதி இஸ்ரேல் மீதான காமாஸ் அமைப்பினது நொண்டிச் சேட்டைக்குப் பின்பு , இரண்டு ஆண்டுகாலவரையான போரும் , இனப்படுகொலையும் குறித்த முதற்கட்ட மதிப்பீட்டை காசா கரையோர வலயத்தின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
பாலஸ்த்தீனம் -காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 80,000 பேர்கள் என அவர்கள் மதிப்பிடப்பட்டுள்ளார்கள் , இத்தோகையுள் பெரும்பாலான பெண்களும் , குழந்தைகளுமே அடக்கம் என்பது உண்மையாகும் . வாழவேண்டிய ஒரு சந்ததி கொல்லப்பட்டு அதித்தபின்பு சமாதானம் எனும் மாயமான் காட்சிப் புலத்தில் எங்கோ தொலைவில் நின்று மேய்கிறது .
கூடவே , நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் : 2023 ‘ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேலிய இராணுவம் கிட்டத்தட்ட 200,000 தொன்கள் எடையுள்ள வெடிபொருட்களைக் காசாப் பள்ளத்தாக்கில் கொட்டியதாகக் கணித்து ஐ.நா. குறித்துரைகிறது . கடந்த இரண்டாம் உலகப் போரோடு இதை ஒப்பிடுகையில் , இரண்டாம் உலகப் போரில் மொத்தம் 60,000 தொன்கள் வெடி பொருள்களே பயன்படுத்தப்பட்டன என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது !
இவ்வளவு , அழிவுக்கும் பின்பும் மக்கள் யுத்த நிறுத்தங் கண்டு மகிழ்ந்து குலாவுகிறார்கள் . ஆகவே , மக்களின் வாழும் விருப்பை மதித்து நாமும் இந்த யுத்த நிறுத்தத்தை ஆதரிப்போம் !
—ப.விஶ்ரீரங்கன்
12.10.25
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment