பொலிவேரியன், ஜும்ஆத் தொழுகையை ஆரம்பிக்க தீர்மானம்
Posted by aljazeeralanka.com on October 15, 2025 in | Comments : 0
பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா உட்பட தேவையான அனைத்து இடங்களிலும் முறையான அனுமதி பெற்று ஜும்ஆத் தொழுகையை ஆரம்பிக்க தீர்மானம்.!
---------------------------------------------------------------
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் இடைக்கால நம்பிக்கையாளர்கள் சபை தலைவர் அல்- ஹாஜ் எம்.எம்.முபாறக் அவர்களின் தலைமையில் இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உலமாக்கள் உட்பட ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு பொலிவேரியன் கிராமத்தில் வாழும் மக்களின் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கும் ஹிஜ்ரா பள்ளிவாயலுக்கு ஜும்ஆத் தொழுகை நடாத்த அனுமதி வழங்குதல் பற்றி அதன் சாதக பாதகங்கள் குறித்து பள்ளிவாயல் தலைவர் முபாறக் அவர்களால் தலைமை உரையில் விரிவான விளக்கம் அளித்த பின்னர் சபையினரிடம் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது.
பொலிவேரியன் கிராமம் ஒரு தனிக் கிராமம், இக்கிராமத்தையும் சாய்ந்தமருது நகரத்தையும் ஆறு ஒன்று பிரித்து இருக்கிறது. இக்கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கும் அதிகமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பள்ளிவாயலுக்கு ஜும்ஆத் தொழுகை நடாத்த அனுமதி வழங்குவதன் மூலம் தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும், இக் கிராமத்தில் வாராந்தம் குத்பா பிரசங்கம் நிகழ்த்துவதன் மூலம் ஒழுக்கங்களை போதிக்க முடியும் என்ற சாதகமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இப்பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை நடாத்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா உட்பட முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை போன்ற இடங்களில் உரிய முறையில் அனுமதி பெற்று இடமளிப்பது என கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களின் கருத்துக்களின் பிரகாரம் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பள்ளிவாயல் இடைக்கால நிர்வாக சபை உபதலைவர் டாக்டர் ஏ.எம்.மிஸ்பாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பள்ளிவாயல் இடைக்கால நிர்வாக சபை செயலாளர் எஸார் மீராசாஹிப் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
இக் கூட்டத்தில் பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் அவர்களின் தலைமையில் மேற்கூறப்பட்ட பள்ளிவாயல் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊரில் உள்ள உலமாக்கள் மற்றும் ஊர் பிரமுகர்களை அழைத்து இது விடயத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கு கடந்த காலங்களைப் போல் அல்லாது மசூரா அடிப்படையில் தீர்வு காணும் வகையில் சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு நடவடிக்கை எடுத்த இடைக்கால நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.எம். முபாறக் ஹாஜியார் அவர்களுக்கு சபையினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment