இலங்கை ஹஜ் கோட்டா வியாபாரிகளுக்கு ஆப்பு.
Posted by aljazeeralanka.com on October 25, 2025 in | Comments : 0
இம்முறை ஹஜ் விவகாரத்தில் ஊழலை தடுக்க அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் சிறந்த நடைமுறைகள்.
ஹஜ் முகவர்கள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்து, மொத்தமாக 93 ஹஜ் முகவர்கள் இம்முறை மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஹஜ் விவகாரத்தில் ஏற்பட்ட மோசடிகளை தடுக்கும் விதமாக, புதிய ஹஜ் கமிட்டி மிகவும் நேர்மையான முறையிலும், சூட்சகமான முறையிலும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த காலங்களில் ஹஜ் கோட்டாக்களை பெற்றுக் கொண்டு சில முகவர்கள், மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லாமல், ஒரு கோட்டா மூன்று லட்சம் வரை விற்பனை செய்து ஒரு வியாபாரமாக செய்து வந்தனர்.
இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதோடு, இந்த கோட்டாக்களை வாங்கிய ஹஜ் முகவர்கள், மேலதிகமாக ஹாஜிகளிடம் மூன்று லட்சங்களை அறவிட வேண்டி வந்தது.
இதனை தடுக்கும் விதமாக ஹஜ் கமிட்டி இம்முறை புதிய சிறந்த நடைமுறை ஒன்றைக் கை க்கொண்டுள்ளது.
இம்முறை ஒரு ஹஜ் முகவருக்கு குறைந்தபட்சம் 25 கோட்டா முதல், கூடியது 75 வரை மட்டுமே வழங்கப்படும். முன்னேய காலங்களைப் போல் நூற்றுக்கும் மேற்பட்ட கோட்டாக்கள் எந்த முகவருக்கும் வழங்கப்பட மாட்டாது. இந்த வரையறையும் அவர்களின் சேவை காலம், சிறந்த சேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டே தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திறந்த கோட்டா முறை ரத்து.
அதாவது ஒரு ஹஜ் முகவருக்கு 75 கோட்டாக்கள் வழங்கப்பட்ட நிலையில், அந்த முகவர் 50 கடவுச்சீட்டுக்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியுமாக இருந்தால், அந்த முகவர் ஹஜ் கமிட்டியின் முன் அந்த 50 கடவுச்சீட்டுக்களையும் மட்டுமே சமர்ப்பித்து, அந்தந்த முகவர்களின் பெயரில், அந்தந்த கடவுச்சீட்டுக்கள் இலக்கத்துக்குரிய கோட்டாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த அந்த முகவரால் 50 கடவுச்சீட்டுக்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடிந்தது என்றால், அவருக்குரிய கோட்டாவாக 50 வீசாக்கள் மட்டுமே வழங்கப்படும்.
முன்னேய காலம் போல், மீதமுள்ள விசாக்களை ஏனைய முகவர்களுக்கு விற்பனை செய்யவோ கைமாற்றம் செய்யவோ முடியாது.
குறிப்பிட்ட ஒரு ஹாஜி ஒரு முகவரிடம் பதிவுகளை செய்து, அவர் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை என்றால், அதற்குப் பதிலாக இன்னொருவரின் பெயரை பதிவு செய்யவும் இடமளிக்கப்பட மாட்டாது. அந்தத் தொகை அவரது கோட்டாவில் கழிக்கப்படும்.
ஹஜ் கோட்டாக்களை பெற்று மக்களை ஹஜ்ஜுக்கு கொண்டு செல்லாமல் ஏனைய முகவர்களுக்கு கோட்டாக்களை விற்று, மேலும் பல லட்சங்களை மக்கள் தலை மீது சுமத்தி அசாதாரணமான முறையில்,வியர்வை சிந்தாமல் வெள்ளிப் பணம் சம்பாதித்த முகவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாகும்.
இதனை கருத்தில் கொண்டு இம்முறை திறந்த கோட்ட முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும்.
இதனை எதிர்த்து. தங்களுக்கு திறந்த கோட்டா முறை வழங்கப்பட வேண்டும் என 17 ஹஜ் முகவர்கள் ஒப்பமிட்டு ஹஜ் கமிட்டிக்கு கடிதம் ஒன்றை வழங்கி உள்ளதோடு, இதனை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும், சில ஹஜ் முகவர்கள் letter dimand அனுப்பி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
என்ன அழுத்தங்கள் வந்த போதிலும் இம்முறையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும், எந்த அழுத்தங்களுக்கும் ஹஜ் கமிட்டி அடிபணிய போவதில்லை என்றும் முக்கியமான ஒருவர் தெரிவித்தார்.
ஆனாலும் இது விடயத்தில் முஸ்லிம் கலாசார திணைக்களம் சம்பந்தப்பட்டோர் ஊழல்களில் ஈடுபடலாம். அது பற்றிய முறையான ஆவனங்கள் பற்றி அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment