BREAKING NEWS

சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியில் உள்ள கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம்

சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியில் உள்ள கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைப்பதற்கும் அந்த பிரதேசத்தில் மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் சுமார் 500 மில்லியன் ரூபாய் தேவைப்படும். கல்லோயா அபிவிருத்தி திட்டத்திற்கு 900 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக் கொண்ட எங்களுக்கு 500 மில்லியன் ரூபாய் பெற்றுக் கொள்வது என்பது மிகப் பெரிய விடயமாக இல்லை. இவ்வாறு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தெரிவித்தார். கரைவாகுப்பற்று கிழக்கு கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்கு கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைக்கும் முன்னோடி ஆலோசனைக் கூட்டம் அல் அமான் சமூக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வொலிவேரியன் கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் இன்று (05) புதன்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் இருந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிவிட்டார்கள். மர்ஹும் அஷ்ரஃப் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று பல கட்சிகளாக உருவாகியுள்ளன. இப்படியாக பல கட்சிகள் உருவாக்கப்பட்டவைகள் மக்கள் நலன் கருதி அல்ல. சிலரின் தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்காகவே இக்கட்சிகள் உருவாக்கப்பட்டன. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றப் போவதில்லை. நாங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். 900 மில்லியன் ரூபாய் செலவில் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தை செய்து கொண்டிருக்கிறோம். பல வீதிகளுக்கு காபர்ட் இட்டுள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் பல வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் வெள்ளநீர் வழிந்தோடும் வகையில் வடிகாலமைப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருகின்றது. சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியில் உள்ள பாலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் நிர்மாணம் செய்யப்படும். இது போன்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள பாலமும் புதிதாக நிர்மாணம் செய்யப்படும். இப்பிரதேச மக்களாகிய உங்களின் பிரதிநிதியான என்னை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் மதித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களில் ஒருவராக என்னை நியமனம் செய்துள்ளார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் தலைவர் முபாறக் ஹாஜியார் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, பரீத் ஹாஜியார் உட்பட இன்னும் பலர் உரை நிகழ்த்தினார்கள். சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எஸார் மீராசாஹிப் உட்பட மேலும் பல பிரமுகர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar