BREAKING NEWS

சாய்ந்தமருது நகர சபை. அதாவுல்லாவின் துரோகம்.

நகர சபை வழக்கு நீயே சாட்சி! வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வழக்குத் தீர்ப்பும், அரசியல் பித்தலாட்ட நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைத்த தீர்ப்பு. சாய்ந்தமருது நகர சபை வெற்றி பெற்று எமதூருக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், வல்லவன் அல்லாஹ்வுக்கு என்றும் நன்றி கூறுவோம். அல்ஹம்துலில்லாஹ்! பொறுமைக்கும் எல்லை உண்டு என்பார்கள், ஆனால் எல்லை தாண்டிய பொறுமை. எமது பொறுமைக்குக் கிடைத்த பரிசு இப்பெரும் வெற்றியாகும். நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அதற்காக பாடுபட்ட ஒவ்வொருக்கும் கோடி நன்றிகள் உரித்தாகட்டும். இறைவன் ஈருலக வெற்றியை வழங்கட்டும் என்ற பிரார்த்தனையுடன்! இந்த வழக்கைப் பொறுத்த வரையில், ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது. சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் செய்யப்பட்ட விசேட வர்த்தமானி 14.02.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. பின்பு 18.02.2020ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய ரீதியில் பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவும் சில அரசியல் விசமிகள் அரங்கேற்றிய பொய்யான, ஓட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதியாக காட்டிய ஒரு துரதிஷ்டமான செயலாகும். அதற்கான கூலிகளை வல்லவன் அல்லாஹ் வழங்கப் போதுமானவன். தொடர்ந்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குச் செல்வதா அல்லது வழக்குப் போடுவதா என்ற சிந்தனை வந்த போது, தேர்தலே முன்னின்றது. தேர்தலில் MPயைப் பெற்று வென்ற கையுடன் நகரசபை வர்த்தமானியை மீளக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனங்களில் இருந்தது. எமதூர் மக்கள் மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபையின் வேண்டுகோளின் பேரில், பல அரச உயர் பதவிகளைத் துறந்து முன் ஓய்வெடுத்து எமதூர் மக்களுடன் நானும் முன்னின்று ஒருமித்த கருத்துடன் சுமார் 10,000க்கு மேற்பட்ட வாக்குகளை தேசிய காங்கிரசுக்குப் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் தேர்தல் நடைபெற்று MP இருந்தும், ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் கழிந்தது. கிழக்கு வாசலுக்குப் போவதும், கேட்கும் போதெல்லாம் அதைச் சரிசெய்ய முடியும் என்று தொடர்ந்தும் கூறப்பட்டது ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்த இவ்வாறான பதில்களில் நம்பிக்கை இழந்த நிலையில், நாங்கள் இவருடங்களாக வழக்குக்குத் தேவையான ஆவணங்களை சேர்ப்பதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டோம். அது மட்டுமன்றி, பல பிரபல சட்டத்தரணிகளை சந்தித்து ஆலோசனைகளையும் பெற்று வந்தோம். சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷஹித், இஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் நஜீப் போன்றோரை சந்தித்தோம். இறுதியாக, உள்ளூராட்சி தேர்தல் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய காங்கிரஸின் கிழக்கு வாசலை அணுகிய போது கைவிரிக்கப்பட்டது. பள்ளிவாசலை சாய்ந்தமருது நகர சபைக்கு தனியாக தேர்தல் அறிவிக்கும்படி கோரி தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்புமாறு கூறப்பட்டது. மேலும் நம்பிக்கை இழந்த நாங்கள், இதற்கு வழக்கைத் தவிர வேறு வழி இல்லை என்று அறிந்த பிறகு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். இடைக்கால உத்தரவு பெறப்பட்டால் மட்டுமே இந்த வழக்கை கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில், அதாஉல்லா அவர்களிடம் வழக்கு போடுவது சம்பந்தமாக கூறிய போது கேசட் செயலில் இல்லை என்றும், வாதாடுவதற்கு சரியான பாயிண்ட் இல்லை என்றும் கூறினார். ஒரு முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் இப்படிக் கூறியதும் அவநம்பிக்கை ஏற்பட்டாலும், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. நான் அவரிடம் கூறிய வார்த்தை, “ஏன் வழக்குப் போடவில்லை என்று சாய்ந்தமருது மக்கள் என்னைப் பிடிப்பார்கள்” என்று கூறிவிட்டு வந்தேன். வழக்கு என்ற இலக்கிலிருந்து நாங்கள் மாறவில்லை. ஆவணங்களை கையளித்து வழக்கு தாக்கல் செய்தோம். குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் பிந்தியிருந்தால்கூட எங்களது வழக்கு திசை மாறி இருக்கும். இடைக்கால உத்தரவு இல்லாமல் நோமினேஷன் முடிவடைந்தால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. சிலவேளை தேர்தல் நடைபெற்றும் இருக்கும். எல்லாம் அவன் செயல். வல்லவன் அல்லாஹ் நாடிவிட்டான் என்றால் யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அரசியல்வாதிகளுடைய நாடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. எமது வழக்கை சிரேஷ்ட சட்டத்தரணியும், பாரிஸ்டருமான திரு சுரேன் ஜனராஜ் அவர்கள் தலைமையிலான குழு சமர்ப்பித்து வாதப் பிரதிவாதங்களை மேற்கொண்டது. பிரதிவாதிகளாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர், தேர்தல் ஆணையம், எல்லை நிர்ணய ஆணையம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பெயரிடப்பட்டன. இரண்டு இடையீட்டு மனுக்களை மருதமுனையிலிருந்து ஒருவரும், கல்முனையிலிருந்து மற்றொருவரும் சமர்ப்பித்தனர். முதலாமவர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி, சட்ட முதுமாணி, SLMC செயலாளர் நாயகம், MP நிசாம் காரியப்பர் அவர்களும், மற்றவர் சார்பாக மற்றொரு சிரேஷ்ட சட்டத்தரணியும், அமைச்சுக்கள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே அவர்களும், தேர்தல் ஆணையம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு சாலிய பீரிஸ் அவர்களுமாக பலர் கலந்து கொண்டனர். சில வேளைகளில் வழக்கு இலக்கம் கூறப்படும் போது சுமார் 10க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் எழுந்து நிற்பார்கள். எனவே இவ்வாறு ஏறக்குறைய கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்று, கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இறுதி வாதப் பிரதிவாதம் பிற்பகல் வேளையில் நடைபெற்றது. எமது சிரேஷ்ட சட்டத்தரணியும், பாரிஸ்டருமான திரு சுரேன் ஜனராஜ் அவர்கள் நீண்ட நேரம் தனது முன்வைப்புக்களைச் செய்தார். பதிலுக்கு முதுமாணி நிசாம் காரியப்பர் மற்றும் ADG நெரின் புள்ளே போன்றோர் கடுமையான பிரதிவாதங்களை முன்வைத்தனர். இறுதியில், மதிப்புமிக்க நீதிபதிகள் வாதப் பிரதிவாதங்களை முடிவுறுத்தி, எழுத்து மூலமான முன்வைப்புக்கு காலம் வழங்கி தீர்ப்பு வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வியாழன் 07.05.2026ஆம் திகதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் அந்த நாள் வந்து தீர்வு வழங்கப்பட்டது. மருதூர் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட்ட நாள். அரசியல் நாடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்டமுறையானது என்றும், தனித்தனியாக கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகர சபைக்கான வட்டாரங்களுக்கான எல்லைகள் தேசிய குழுவினால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வெற்றியானது சாய்ந்தமருதை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. UC என்ற இலக்கை உள்ளத்தில் இறுதிவரை சுமந்து கொண்டு சென்ற செயற்பாட்டாளர்கள், போராளிகள், ஓட்டு மொத்த மருதூர் மக்கள் அனைவருக்கும் உரித்தானது. எனவே, இப்பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தில் பிரிவினைகளையும் அரசியல் பேதங்களையும் தாண்டி நின்று, எதிர்காலத்தில் ஒரு வளமிக்க முன்மாதிரியான சபையாக சாய்ந்தமருது நகர சபை மிளிர, எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும். மேலும், சுயநலமற்ற மருதூரை நேசிக்கும் ஒரு குழுவிடம் அதிகாரம் சென்றடைய எனது வலுவான பிரார்த்தனைகளை முன்வைக்கிறேன். பாரக்கல்லாஹு பீக்கும்......... ஆமீன்! உங்களில் ஒரு நகரசபை போராளியாக என்றும் A.L.M சலீம்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar