மாணவர்களே தமது விடைத்தாள்களை பார்வையிட முடியும்!
Posted by aljazeeralanka.com on May 16, 2026 in | Comments : 0
தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ், பரீட்சார்த்திகள் தமது விடைத்தாள்களையும் புள்ளிகளையும் பார்வையிடுவதற்கு உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான தகவல்களை வெளியிடுவதைத் தடுக்குமாறு கோரி இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பு 2026 மே 08ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரால் வழங்கப்பட்டது.
2023 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி (LLB) தெரிவுப் பரீட்சைக்குத் தோற்றிய தனது மகளின் விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளை வழங்குமாறு ஆர்.ஏ. ஜனக்க ரொஷான் ரணசிங்க என்பவர் விடுத்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கு தொடரப்பட்டது.
பரீட்சை தொடர்பான தகவல்களை வௌிப்படுத்துவது பரீட்சை நடைமுறையின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி பல்கலைக்கழகம் அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.
எவ்வாறாயினும், பின்னர் தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு குறித்த தகவல்களை வழங்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டதுடன், அந்தத் தீர்மானத்திற்கு எதிராக பல்கலைக்கழகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது.
ஒரு பரீட்சார்த்தி தனது சொந்த விடைத்தாளையும் அது மதிப்பீடு செய்யப்பட்டுள்ள விதத்தையும் பார்க்கக் கோரும்போது, அதனை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை என நீதியரசர் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு பரீட்சார்த்தி தான் எழுதிய விடைத்தாளையும் அதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ள விதத்தையும் கோரும்போது, அதனை நிராகரிக்க எனக்கு எந்த காரணமும் தெரிவதாக இல்லை" என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அரசியலமைப்பின் 14 (அ) உறுப்புரை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகள் என நீதிமன்றம் மேலும் வலியுறுத்தியது.
அரசு நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நீதிமன்றம், "உயர்கல்வி நிறுவனங்களில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட முடியாது" என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உள்விதிமுறைகளை விட தகவல் அறியும் உரிமைச் சட்டம் பலமானது என்றும், நிறுவன ஒழுங்குமுறைகளை விட சட்டம் மேலானது என்றும் நீதிபதிகள் குழு தீர்மானித்தது.
மதிப்பீட்டாளர்களின் அடையாளத்தை இரகசியமாகப் பேண முடிந்த போதிலும், பரீட்சார்த்திகள் தமது புள்ளிகள் வழங்கப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் இலங்கை மற்றும் இந்தியாவின் முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளையும் நீதிமன்றம் இங்கு மேற்கோள் காட்டியது.
மீளாய்வு அதிகாரங்களைப் பயன்படுத்துமளவிற்கு விசேடமான சூழ்நிலை எதனையும் சுட்டிக்காட்ட மனுதாரர்கள் தவறியுள்ளதை அவதானித்த நீதிமன்றம், இறுதியில் பல்கலைக்கழகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
#Tamil #TamilNews
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment