நெளபர் மௌலவியின் வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டதே'
Posted by aljazeeralanka.com on June 24, 2026 in | Comments : 0
உயிர்த்த ஞாயிறு வழக்கு: 'நெளபர் மௌலவியின் வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டதே' - மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழு தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக
விசாரணை செய்யப்பட்டு வரும் பெரு வழக்கின் முதலாவது எதிரியும், சஹ்ரானின் குழுவின் ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுபவருமான நெளபர் மௌலவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கிய வாக்குமூலமானது, சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்ட ஒரு பிரகடனமாகும் என கொழும்பு நிரந்தர நீதியரசர்கள் குழு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதியரசர்களான ராமநாதன் கண்ணன், சுஜீவ நிசங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், தலைமை நீதியரசர் நவரத்ன மாரசிங்க நேற்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முறைப்பாட்டாளர்களின் தரப்பு வழக்கு ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்திய தீர்க்கமான சாட்சியம்
பிரதிவாதியின் இந்த வாக்குமூலத்தின் மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அதனைத் திட்டமிட்ட விதம் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளிவருகின்றன. இந்த வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டது என ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக இதனை ஒரு சாட்சியமாக சமர்ப்பிக்க முடியும்.
நெளபர் மௌலவி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் வைத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விஜித பெரேராவிடம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.
குறித்த வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டதா என்பதை ஆராய்வதற்காக, கொழும்பு நீதியரசர்கள் குழு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் ‘வொயர் டயர்’ (Voir Dire) உண்மைத்தன்மை விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் காரணிகளை ஆராய்ந்த நீதியரசர்கள் குழு, சம்பந்தப்பட்ட வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டுள்ளது என தீர்ப்பளித்தது.
நான்கு பிரதிவாதிகளின் வாக்குமூலங்களும் சுயவிருப்பின் பேரில் என்பது உறுதி
இதுவரை இவ்வழக்கின் நான்கு பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், 8 ஆவது பிரதிவாதியின் வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்படவில்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வாக்குமூலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
முதலாம் எதிரியான முஹம்மது இப்ராஹிம் முகமது நெளபர் எனப்படும் அபு செயித் எனப்படும் அபு சரீம் எனப்படும் நெளபர் மௌலவி.
11 ஆம் எதிரியான காலிப் சமீர்.
4 ஆம் எதிரியான முகமது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா.
9 ஆம் எதிரியான முகமது ரமீஷ் முகமது சாஜித்.
18 ஆவது பிரதிவாதி மீதான உத்தரவு வரும் 30 ஆம் திகதி
இவ்வழக்கின் 18 ஆவது பிரதிவாதியான ராசிக் ராசா ஹுசைன் வழங்கிய வாக்குமூலம் சுயவிருப்பின் பேரிலானது தானா என்பது குறித்த உத்தரவு வரும் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
வழக்கின் 11 ஆம் எதிரியான காலிப் சமீர் 2019 ஆம் ஆண்டில் கல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் அளித்த வாக்குமூலமும் சுயவிருப்பின் பேரில் அளிக்கப்பட்டது ஒன்றென கொழும்பு நிரந்தர நீதியரசர்கள் குழு மேல் நீதிமன்றம் முன்னதாக ஏகமனதாகத் தீர்ப்பளித்திருந்தது. தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட்டிருந்ததுடன், அதனை அரச சாட்சியமாக வழக்கு விசாரணையில் உள்வாங்குவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. காலிப் சமீர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அந்த வாக்குமூலம் கட்டாயப்படுத்திப் பெறப்பட்டது என வாதிட்ட போதிலும், அது குறித்து நடத்தப்பட்ட வொயர் டயர் விசாரணையின் பின்னர் நீதியரசர்கள் குழு அவ்வாதத்தை நிராகரித்தது.
அதேபோல், 9 ஆம் பிரதிவாதியின் வாக்குமூலமும் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டது என நீதிமன்றம் 2026 மே 29 ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 12 ஆம் பிரதிவாதிக்குரிய வொயர் டயர் விசாரணையை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் தற்போது நீதிமன்றத்திற்கும் பிரதிவாதிகள் தரப்பிற்கும் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 25 ஆம் பிரதிவாதிக்குரிய வொயர் டயர் விசாரணையின் சாட்சி வழிநடத்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெளபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் சம்ப்வங்கள் தொடர்பில் நெளபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டத்தரணி சக்திக ஜாகொடஆரச்சி, அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி முறைப்பாட்டுத் தரப்பை வழிநடத்துகின்றனர்.
சட்டத்தரணிகளான கநீல் மத்துமகே, லோரன்ஸ் ஆடம்ஸ் ஹாலி, லக்ஷ்மன் பெரேரா ஆகியோர் பிரதிவாதிகள் தரப்புக்காக முன்னிலையாகியுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment