BREAKING NEWS

தெஹிவள கல்விஹாரை மாவத்தையில் உள்ள பள்ளிவாயலுக்கு கல் எறியப்பட்டதற்கு உலமா கட்சி கண்டனம்


தெஹிவள கல்விஹாரை மாவத்தையில் உள்ள பள்ளிவாயலுக்கு கல் எறியப்பட்டதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மேற்படி பள்ளிவாயலில் சட்டத்துக்கு முரணாக மாடு  அறுக்கப்பட்டால் அதனை நீதி மன்றத்திடம் முறையிடுவதை விடுத்து பௌத்த பிக்குகள்  சட்டத்தை கையிலெடுப்பதும் கல்லால் வணக்கஸ்தலத்துக்கு எறிவதும் நாட்டின் அரசாங்கத்தை  அவமதிப்பதாகும். இதன் மூலம் நாட்டில் பௌத்த பயங்கரவாதம் உருவாகுவதாகவே கருத முடியும். ஒரு வணக்கஸ்தலத்தில் சட்டத்துக்கு மாறாக ஏதும் நடைபெறுமாயின் அத்தகைய செயல்களில் ஈடுபடுவேரே கைது செய்யப்பட வேண்டுமே  தவிர வணக்கஸ்தலமே மூடப்பட வேண்டுமென்பதை அறிவுள்ள எந்த மனிதனும்  ஏற்க மாட்டான்.
சில பௌத்த பன்சலைகளில்  சில பௌத்த பிக்குகள் அங்கு வரும் பெண்களை துஷ்பிரயோகம் செய்து கைது செய்யப்படும் செய்திகளை அடிக்கடி நாம் ஊடகங்களில் காண்கிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட பன்சலையை மூடும் படி எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, பன்சலைக்கு கல் எறியவுமில்லை.  மாறாக துஷ்பிரயோகம்  செய்த பிக்குகளே கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டில் நீதி சரியாக செயற்பட்டது.
இந்த நிலையில் தம்புள்ள பள்ளி வாயல் விடயத்தை தொடர்ந்து குருனாகல்,தெஹிவலை என இஸ்லாமிய வணக்கஸ்தலங்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டின் சமாதானத்துக்காக குரல் கொடுக்கும் எம்மை கவலையுறச்செய்கின்றன. ஐ. நா  சபையில் இலங்கைக்கு ஆதரவு வேண்டி எந்த பௌத்த பிக்குவும் செல்லாத நிலையில் எமது உலமாக்கள் இருவரே விழுந்தடித்துக்கொண்டு அங்கு சென்றனர். ஆனாலும் இன்று அத்தகைய உலமாக்களின் இஸ்லாமிய வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுகின்றன என்றால் அந்த உலமாக்கள் நாட்டுக்கு ஆதரவு தேடி ஐ நா சென்றதை பௌத்த பிக்குகள் விரும்பவில்லையா என்ற கேள்வியே எழுகிறது.
ஆகவே தெஹிவலை பள்ளிவாயல் மீதான கல்லெறி தாக்குதலை நாம்  வன்மையாக கண்டிப்பதோடு அரசாங்கம் தொடர்ந்தும் சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பதை பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar