BREAKING NEWS

அமைச்சர் றிசாத் அமைச்சரவை கூட்டத்தின் போது சீற்றம்! கடுந்தொனியில் ஜனாதிபதியிடம் பேச்சு!


  on June 14, 2012

-அபூ அஸ்ஜத் -
அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போது சீற்றத்துடன் பேசியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் பெரும்பான்மை இனவாத சக்திகளினதும், சில பௌத்த மத துறவிகளினதும் செயற்பாட்டால் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வில்லையென்ற குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் றிசாத் மிகவும் கடுந்தொனியில் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
தம்புள்ள, குருநாகல், தெஹிவளை தற்போது பெந்தர பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் மற்றும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து
இனவாதிகளாலும்,ஏனையவர்களாலும் மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கையினை எடுக்காது பேனால், முஸ்லிம்-சிங்கள மக்கள் மத்தியில் பெரும் முறுகல் நிலையேற்படும் எனவும், இவற்றை தடுத்து நிறுத்த அமைச்சர்கள் குழுவொன்றினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
இவ்வாறு முஸ்லிம் மதத்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமையாது என்பதை அமைச்சர் றிசாத் கடுந்தொனியில் தெரிவித்தாகவும் தெரியவருகின்றது. அமைச்சரின் ஆவேஷத்தை புரிந்து கொண்ட ஜனாதிபதி அக்குழுவினை நியமிப்பதற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இன்னும் சில வாரங்களில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட இருக்கும் நிலையில் அரசுக்குள் உள்ள முஸ்லிம் கட்சிகளான அமைச்சர் ரவூப் ஹக்கீமை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன அரசுடன் முறன்படும் நிலையினை காணமுடிகின்றது. குறிப்பாக தம்புள்ள பள்ளிவாசல் முதல் தற்போது வரை பள்ளிவாசல்கள் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் குறித்தும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் காணப்படும் காணி தொடர்பான சர்ச்சைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவில்லாத நிலையொன்றை காணமுடிகின்றது என்ற கருத்தை இக்கட்சிளின் பிரதி நிதிகள் பகிரங்கமாக பல்வேறு இடங்களில் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான அமைச்ச்ர் றிசாத் பதியுதீனைக் கொண்ட அ.இ.மு.கா, எடுக்கும் தீர்மானங்கள் அடுத்து வரவுள்ள மாகாண சபை தேர்தல்களில் பேசப்படும் ஒரு பொருளாகவே இருக்கும் என விமர்சனங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. முஸ்லிம்களின் மத சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்படுகள், அதனது பின்னணி குறித்து அரசாங்கம் ஆழமாக நோக்க வேண்டும் என்றும் அவ்வாறு தவரும் பட்சத்தில் வித்தியாசமான முடிவுகள் எடுப்பது குறித்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பேசப்படலாம் என தெரியவருகின்றது.
எவை எவ்வாறாக இருந்த போதும் அரசாங்கத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் விசுவாசமாகவே இருந்துவந்துள்ளதை நடைபெற்று முடிந்த தேர்தல்களில் எல்லாம் நிரூபித்து காட்டியுள்ள அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பரந்தளவில் 56 பாராளுமன்ற, மாகாண சபை, நகர, பிரதேச சபைகளின் ஆசனங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar