BREAKING NEWS

அதிகார பலமில்லாத அமைச்சர் பௌசியினால் சுதந்திர கட்சியை பலப்படுத்த முடியுமா?

சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் அரசியல் அதிகார பலத்தை பறித்துக்கொண்டு அவரை மட்டக்களப்புக்கு அனுப்பி ஸ்ரீ. சுதந்திர கட்சியை பலப்படுத்த முனைவது வேடிக்கையானதாக உள்ளது  என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


அமைச்சர் பௌசி மட்டுமே ஸ்ரீ . சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராவார். அவர் சுதந்திரக்கட்சியை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். அவரால் கிழக்கு மாகாணம் முன்பு பல நன்மைகளை அடைந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலேயாகும். பயங்கரவாத சூழ்நிலை நிலவிய காலப்பகுதியல் இந்த வைத்தியசாலை மிகப்பெரிய நன்மையாக மக்களுக்கிருந்தது. 
அத்தோடு நிற்காமல் வயதான காலத்திலும் தேசியப்பட்டியலை நம்பாமல் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர். ஆனாலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கும், சமூகத்துக்கும் சேவை செய்யக்கூடிய எத்தகைய அதிகாரமும் இல்லாத சிரேஷ்ட அமைச்சுப்பதவியில் அவர் முடக்கப்பட்டார். ஆகக்குறைந்தது முஸ்லிம் சமய விவகார அமைச்சராகக்கூட அவர் நியமிக்கப்பட்டிருக்கலாம். 

அதிகாலை எழுந்தது முதல் பொது மக்களை சந்திக்கும் பழக்கமுள்ள ஒரேயொரு முஸ்லிம் அமைச்சரான பௌசி அவர்கள்  மக்களுக்கு சேவை செய்ய முடியாதபடி அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டதன் மூலம் சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருக்கே இந்தக்கதி என்றால் இளம் உறுப்பினர்களுக்கு என்ன கதி நடக்கும் என்பதை மக்கள் உணராமலில்லை. 

இத்தகைய சூழ்நிலையில் கிழக்கில் பலமிழந்து போயிருக்கும் சுதந்திர கட்சியை பலப்படுத்த பலத்தையெல்லாம் பறித்துக்கொண்டு அவரை அனுப்பியிருப்பதன் மூலம் சுதந்திரக்கட்சி இன்னமும் தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றே புரிகிறது. அதுவும் தென்னிலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், இந்துக்கோவில்கள் தாக்கப்படுகின்ற இந்த சூழ்நிலையில் அவற்றை தீர்ப்பதில் சுதந்திர கட்சி எத்தகைய முயற்சியையும் எடுக்காத நிலையில் வெறுமனே கட்சியை பலப்படுத்த கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்கள் முன்வருமளவு அவர்கள் சமூகப்பற்றற்வர்களல்ல என்பதை சொல்லி வைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar