BREAKING NEWS

பஷீர் சேகு தாவுதின் அமைச்சுப்பதவி ராஜினாமா- தலைவரும் தவிசாளரும், அரசாங்கமும் இணைந்து நடாத்தும் நாடகமே


தினமும் கிழக்கு மாகாணத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை தக்க வைப்பதற்கும் தனது வாக்கு மூலத்தினால் ஏற்பட்ட உள்வீட்டு சர்ச்சையை திசை திருப்புவதற்குமான நாடகமே பஷீர் சேகு தாவுதின் அமைச்சுப்பதவி ராஜினாமாவாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். ஐ தே கவின் கல்முனை வேட்பாளர் ஸறூக் காரியப்பரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கருத்தரங்கிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,


பள்ளிவாயல்கள் அசிங்கப்படுத்தலுக்கெதிராக வாக்களிப்பதாயின் அரசாங்கத்தின் வெற்றிலைக்கோ அரசின் பங்காளியான மரத்துக்கோ வாக்களிக்காமல் எதிர் கட்சியான யானைக்கு வாக்களிப்பதே சரி என்ற தெளிவு கிழக்கு முஸ்லிம்களிடம் பரவலாக ஏற்பட்டு வருவதை காண்கிறோம். இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு கணிசமாக குறைந்து வருகிறது. அத்தோடு பசீர் சேகு தாவுத் அவர்கள் மக்கள் மன்றத்தில் என்ன பேசுவது என புரியாமல் வாக்கு மூலம் அளித்து மாட்டிக்கொண்டதன் காரணமாக மர ஆதரவாளர்கள் பலர் மரமும் வெற்றிலையும் ஒன்றுதான் என்பதையும் இருவரும் இணைந்து முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் புரிய ஆரம்பித்து கலகம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இப்படியான உள்ளுர் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக மு. காவின் தலைவரும் தவிசாளரும், அரசாங்கமும் இணைந்து நடாத்தும் நாடகமே இந்த ராஜினாவாகும்.  அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்த பஷீர், பாராளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதாக அறிவிக்கவில்லை.  ஆகவே அவர் இன்னமும் அரச ஆதரவு உறுப்பினராகவே இருக்கின்றார். தேர்தல் முடிந்ததும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்களை அரசுக்கு விற்று விட்டு முன்னரை விட உயர்ந்த அமைச்சை எடுப்பார் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா?

தேர்தல் நெருங்கும் போது ரஊப் ஹக்கீமும் தனது அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் சமூகத்துக்காக என தமது பதவிகளை ஒரு போதும் துறக்காத இவர்கள் கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐ தே கவை வெல்ல வைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் முடிந்ததும் பின்கதவால் மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்கள். இதே போன்று தேர்தல் முடிந்ததும் மீண்டும் அமைச்சராகி விடுவார்கள். இவர்கள் எந்தக்கட்சியுடன் இணைந்திருந்தாலும் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு ஏமாற்றலாம் என்ற ஒரேயொரு விடயத்தில் மகா கைதேர்ந்தவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இத்தகைய தொடர் ஏமாற்றுகளுக்கு கிழக்கு மக்கள் பலியாகாமல் இம்முறை யானைக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே நாம் ஏமாந்தவர்கள் அல்ல என்பதையும் மத சுதந்திர உரிமை மீறல்களுக்கெதிராக நமது வாக்குகளை பாவித்ததாகவும் முடியும் என முபாறக் மௌலவி கூறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar