BREAKING NEWS

ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் ?


ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் என சிங்கள சமூகம் நினைக்கிறது என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் இந்த நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தஃவா களத்தில் இருப்பதாக சொல்லும் அமைப்புக்களே ஏற்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நமது நாட்டில் தப்லீக், தவ்ஹீத், ஜமாஅத் இஸ்லாமி, தரீக்கத் என பல ஜமாஅத்துக்கள்- அமைப்புக்கள் சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. அப்படி இருந்தும் இந்தச்சிறிய நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்கள் இஸ்லாத்தையும், தொழுகையையும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்த இயக்கங்கள் இது கால வரை குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டி வந்துள்ளன என்றே தெரிகிறது.

மேற்படி ஜமாஅத்துக்கள் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின் சில சில பகுதிகளை பிரித்தெடுத்துக்கொண்டு அவற்றை பிரச்சாரம் செய்வதில்தான் காலம் கடத்தியுள்ளனரே தவிர இஸ்லாத்தின் தஃவாவை மற்றவர்களிடம் எத்தி வைக்கவேயில்லை என்பது வெளிச்சமாகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பத்து வருடங்கள் மட்டுமே வாழ்நதார்கள். இந்தக்கால எல்லைக்குள் முஸ்லிம்களிடம் தஃவாச்செய்து கொண்டிருக்கவில்லை. மாறாக ஏனையவர்களிடம் தஃவாவை எத்திவைப்பதற்கே குழுக்களை அனுப்பி வைத்தர்கள். இன்று எமது அமைப்புக்கள் முஸ்லிம்களிடம் தஃவா செய்வதாக குர்ஆன் ஹதீதுக்கு சொல்லி தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தஃவா என்ற சொல் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிய அறிவின்பால் அழைக்கும் சொல்லாகும். முஸ்லிம்களுக்கு தொழுகை, ஈமான், தவ்ஹீத் போன்றவற்றை கற்றுக்கொடுப்பதற்கு தஃலீம் என்றே குறிப்பிடப்படுகிறது. 
முஸ்லிம் அமைப்புக்கள் முதலில் முஸ்லிம்களை திருத்தி விட்டு பின்னர் மற்றவர்களிடம் செல்லப்போவதாக சுன்னாவுக்கு முரனாக செயற்படுகிறார்கள். நபியவர்கள் காலத்து மதினத்து முஸ்லிம்கள் மத்தியலும் தவறுகள், பொடுபோக்குகள் இருக்கத்தான் செய்தன. இருந்தும் நபியவர்கள் முஸ்லிம்களை திருத்தி முடிக்க வேண்டும் என்றிருக்கவில்லை. மாறாக கொஞ்ச நேரம் முஸ்லிம்களுக்காகவும் பெரும்பாலான நேரங்களை மற்றவர்களுக்குமாகவே செலவு செய்தார்கள். 

இந்த உண்மைகளை உணராமல் எமது ஜமாஅத்துக்கள் தமது நேரத்தையும், பணத்தையும் வீணடித்ததன் பிரதி பலன்தான் தொழுகைகளால் சமூகங்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றன என மாற்று மதத்தவர்கள் பிழையாக விளங்கியமையாகும். முஸ்லிம்கள் மத்தியில் எமது ஜமாஅத்துக்கள் தங்களது வீரத்தனத்தையும், பிரசங்கித்தனத்தையும் காட்டினார்களே தவிர அழகிய முறையில் மற்றவர்களிடம் செல்லாததன் விளைவை இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கிறது. இந்த ஜமாஅத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை முடியுந்தருவாயில் உள்ளது. 

ஆகவே இவற்றுக்கான முழு பொறுப்பையும் எமது ஜமாஅத்துக்கள் ஏற்பதோடு இனியாவது தங்களது நேரத்தையும், காலத்தையும், முயற்சிகளையும் முஸ்லிம்கள் மத்தியிலேயே சுற்றிவருவதற்கு பாவிக்காமல் ஏனைய சகோதரர்களுக்கு சத்தியத்தை விளக்க முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar