BREAKING NEWS

காலாவதியாகிவிட்ட தீர்வு பற்றி திரு. சம்பந்தன் இப்போது பேசுவதை விடுத்து யதார்த்தப+ர்வமான, நிலையான தீர்வை சிந்திக்க வேண்டும்- உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத்


வடக்கையும் கிழக்கையும் இணைத்துவிட்டு அம்பாரை மாவட்டத்தின் சில தொகுதிகளை உள்ளடக்கிய தென் கிழக்கு மாகாணம் எனும் காலாவதியாகிவிட்ட தீர்வு பற்றி திரு. சம்பந்தன் இப்போது பேசுவதை விடுத்து யதார்த்தப+ர்வமான, நிலையான தீர்வை சிந்திக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.


அண்மையில் திருகோணமலையில் உரையாற்றிய திரு. சம்பந்தன் அவர்கள் வடக்குடன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை இணைத்துவிட்டு கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளை இணைத்த தென் கிழக்கு அலகு பற்றி மறைந்த தலைவர் அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக்கூட்டணி அந்நாளில் பேசியதை முஸ்லிம்களுக்கான தீர்வாக கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இக்கருத்து பயங்கரவாதம் நிலவிய காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டிருந்த காலத்தில் ஒரு தற்காலிக தீர்வாகவே மறைந்த தலைவர் கடந்த பதினான்கு வருடங்களுக்கு முன் பேசியிருந்தார். 

இத்தகைய தீர்வு இந்நாளில் பொருந்தாது என்பதுடன் இத்தீர்வின் மூலம் வடமாகாண முஸ்லிம்களும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் வஞ்சிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் இலங்கையில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் காத்தான்குடியை வடக்குடன் இணைப்பது என்பது  கற்பனை பண்ணக்கூட முடியாத பயங்கரமாகும். 

உலமா கட்சியை பொறுத்தவரை கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக அலகும் வட மாகாண முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக அலகும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த வகையில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளுடன், காத்தான்குடி நகர சபை, ஏறாவ+ர் நகர, பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய பிரதேச சபைகளின் உள்ளே வரும் அனைத்து நிலங்களையும் கொண்டதாகவே தென் கிழக்கு மாகாணம் அமைய வேண்டும். அதே போல் வடமாகாணத்தின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முசலி, எருக்கலம்பிட்டி, தண்ணீருற்று, யாழ் சோனக தெரு போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாக தென் வடக்கு நிர்வாக அலகு வழங்கப்படுவதே வட மாகாண முஸ்லிம்களுக்கும் விமோசனமாக அமையும்.  இந்த வகையில் காலாவதியாகிப்போன தீர்வுகளை ஒதுக்கி விட்டு யதார்த்தப+ர்வமான எமது தீர்வுத்திட்டத்தை ஏற்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவை நிரந்தரமாக கட்டி எழுப்ப முடியும் என்பதே உலமா கட்சியின் கருத்தாகும் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar