BREAKING NEWS

அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது -உலமா கட்சித்தலைவர்


பள்ளிவாயல்கள் தாக்குதலுக்கு ஊக்குவித்தல் மற்றும் சிலைகளை வைத்து முஸ்லிம் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்குகளை அளிக்க வைப்பதன்  மூலம் அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்பது அரசம், மு.காவும் சேர்ந்து நடாத்தும் நாடகமாகும். தம்புள்ள சம்பவத்தை தொடர்ந்து அரசுக்கும் அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் மீதும் முஸ்லிம்கள் அதிருப்தி கண்டனர். இந்நிலையில் மாற்று முஸ்லிம் எதிர்க்கட்சி ஒன்று முஸ்லிம் சமூகத்தில் இல்லாததன் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகள் ஐ தே வுக்கு சென்று அக்கட்சி ஆட்சியை தீர்மாணிக்கும் நிலை வரக்கூடிய சாத்தியக் கூறுகளே தென்பட்டன. இதன் காரணமாகவே ஸ்ரீ . முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களமிறக்கப்பட்டு ஐ தே கவுக்கு செல்லவிருந்த முஸ்லிம் வாக்குகளை தனியாக சேகரித்து அரசுக்கு வழங்கும் துரோகத்தனத்தை அக்கட்சி செய்து வருகின்றது. இதனை தெளிவு படுத்தக்கூடியதாகவே மு. காவின் தவிசாளர், மற்றும் வேட்பாளர்களின் பேச்சுக்கள் இருக்கின்றன. கிழக்கு தேர்தலின் பின் அரசில் அங்கம் வகிக்கக்கூடிய அளவு ஆசனங்களை பெற வேண்டும் என தவிளாளர், வேட்பாளர்கள் தெரிவித்து வருவதன் மூலம் இவர்களின் தரகர் வேலையை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல்கள் காலத்தில் கூட பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்றன, சிலைகள் வைக்கப்படுகின்றன என்றால் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? வாக்குகளை பெற நினைக்கும் அரசு இதற்கு துணை போகுமா? இல்லை. அப்படியிருந்தும் இதற்கு துணை போகிறார்கள் என்றால் இப்படியான செயல்கள் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை கிளப்பி அரச பங்காளி கட்சியான மரத்துக்கு வாக்குகளை பெற்று கிழக்கில் ஆட்சியமைக்கும் தந்திரமாகும். இதன் மூலம்; கிழக்கு மாகாண சபையை அரசு கைப்பற்றிக்கொள்வதுடன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பள்ளிகளையும் ஒரு கணக்கு பண்ணி விட்டு சில பிரதேசங்களையும் சிலை வைத்து கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சியே இதுவாகும். இவ்வாறு இரண்டையும் ஒரே கல்லில் பெறும் மொசாட் திட்டமே முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்து கொண்டே தனித்து போட்டியிடும் தந்திரமாகும். இந்தத்திட்டத்தின் இன்னொரு கட்டம்தான் அரசை எதிர்ப்பது போல் எதிர்த்துக்கொண்டு அரசின் பங்காளிக்கட்சியான முஸ்லிம் காங்கிரசில் அசாத் சாலி போட்டியிடுவதாகும். அரசாங்கம் என்றால் அது முஸ்லிம் காங்கிரசும்தான் என்பது அரசியல்வாதியான அவருக்குத்தெரியாதா? அப்படியிருந்தம் அவர் அக்கட்சியில் போட்டியிடுவதன் மூலம் கிழக்கு மக்களை மிக இலகுவாக ஏமாற்றலாம் என்ற நினைப்பேயாகும். இதன் பின்னணியில் ரங்காவும் இருப்பதை பார்த்த பின்பும் நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? 

தேர்தல் மேடைகளில் எதையெல்லாமோ பேசி உசுப்பேற்றும் மு. கா தலைவர், எந்த நிலையிலும் அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைக்க உதவ மாட்டோம் என இதுவரை கூறாமல் இருப்பது இதற்காகத்தான். நமது இக்கருத்தை பார்த்த பின் மக்களை ஏமாற்ற அவ்வாறு கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் 2004 பொதுத்தேர்தலின் போது இதற்குப்பின் மு. கா தலைமை அமைச்சுப்பதவிகளை பெறாது எனக்கூறி அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டு 2007ல் அமைச்சுப்பதவியை பெற்றவர் அல்லவா!

ஆகவே அரசாங்கத்துக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என நினைத்து மரத்துக்கு வாக்களிப்பது சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகி விடும். அரசுக்கும் அரசோடு இன்னமும் ஒட்டிக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் எதிராக நாம் வாக்களிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை சின்னக்குழந்தையும் அறியும். அதனை விடுத்து அரசுடன் இணைந்து மாகாண சபையில் பெறப்போகும் ஒன்று அல்லது இரண்டு அமைச்சுக்களுக்காக முஸ்லிம் சமூகம் தனது தன்மானத்தை இழந்து விடக்கூடாது என்பதுதான் எமது ஆதங்கமாகும்.  

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar