BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு;; பேரம் பேச முடியும் என்றால் இதுவரை அந்தக்கட்சி முஸ்லிம்களின் உரிமையில் எந்த ஒன்றையாவது பேரம் பேசியுள்ளதா? -உலமா கட்சி சவால்


முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு;; பேரம் பேச முடியும் என்றால் இதுவரை அந்தக்கட்சி முஸ்லிம்களின் உரிமையில் எந்த ஒன்றையாவது பேரம் பேசியுள்ளதா? என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது


இப்படியான தேர்தல் கால கூற்றுக்கள் அக்கட்சியினரின் சமூகத்தை ஏமாற்றும் வழமையான கருத்தாகும். முஸ்லிம் சமூகம் இது வரை பல தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் இது போன்ற கருத்தை கூறி மக்களின் வாக்குகளை பெற்ற பின் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் ஒரு சிறிய பிரச்சினையைக்கூட மு. கா முன் வைத்து பேரம் பேசியதாக சரித்திரமில்லை. பதவிகள் தவிர வேறு எந்த ஒரு மண்ணாங்கட்டியையும் அக்கட்சி; பேசவில்லை. 

கிழக்கு மாகாண சபையில் கணிசமான உறுப்பினர்களை பெற்றால் ஒரு அமைச்சர் அல்லது இரண்டு அமைச்சர்களைப்பற்றித்தான் பேசப்போகிறார்கள். கடந்த கிழக்கு மாகாண சபையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் மேற்கொண்ட ஜெய்க்கா மூலமான அபிவிருத்திகளை கொச்சைப்படுத்திய மு. கா உறுப்பினர்கள் தமது கட்சி அமைச்சுப்பதவியேற்றால் அவர்களும் ஜெய்க்கா போன்ற நிறுவனங்களின் தரகர்களாகவே இருப்பதை தவிர வேறு ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை.  

முஸ்லிம் சமூகத்தின் இன்றைய பிரச்சினை அபிவிருத்திகளல்ல. அபிவிருத்திகளை பெற்றுத்தர ஹக்கீம், அதாவள்ளா, ரிசாத், பௌசி போன்ற அமைச்சர்கள் அரசாங்கத்தில் ஒட்டியுள்ளார்கள்.  ஆனால் இன்றைய நமது பிரச்சினை நமது பள்ளிவாயல்களையும், காணிகளையும், இருப்பையும் காத்துக்கொள்வதுதான். இதற்காக நாம் முஸ்லிம் எதிர்க்கட்சி ஒன்றினை இதுவரை பலப்படுத்தாமல் விட்டு விட்டோம் என்பது மிகப்பெரிய குறையாகும். இந்த நிலையில் நமது பிரச்சினைகளுக்கு கிழக்கு மக்கள் என்ன தீர்ப்பை வழங்கப்போகிறார்கள் என்பதுதான் இன்றைய எதிர் பார்ப்பாகும். வெற்றிலைக்கோ அல்லது அரசின் தரகரான மரத்துக்கோ வாக்களிப்பதால் நமது பிரச்சினைகளை தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் சொல்ல முடியாது. மரம் வெற்றி பெற்றால் அதுவும் தமது வெற்றியே என்றுதான் அரசாங்கம் கூறும். கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் வெற்றிலையும் மரமும் தனித்தனியே போட்டியிட்டு மரம் வென்று அதிகாரத்தை பிடித்த போது மு. காவும் அரசின் பங்காளிதான் என்பதால் இது அரசுக்கு கிடைத்த வெற்றி என்றே அரசு சொல்லியதுடன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாநகர சபை பட்டியலில் அக்கரைப்பற்று போன்றே கல்முனையையும் இணைத்துக்கொண்டது. 

தமிழ் மக்கள் த தே கூட்டமைப்புக்கு வாக்களிப்பதல் அர்த்தம் உண்டு. ஏனெனில் அக்கட்சி அமைச்சுப்பதவிகளை ஏற்காமல் எதிர் கட்சியாக பயணிக்கிறது. ஆனால் அரசில் அங்கம் வகிக்கும் மு. காவை தமிழ் கூட்டமைப்புடன் ஒப்பிட்டு முஸ்லிம்கள் அதற்கு வாக்களிக்க வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும். 

எனவே பேரம் பேசுதல் என்ற பொய்யான வார்த்தைக்கு முஸ்லிம் சமூகம் ஏமாறப்போகிறதா அல்லது தமது புனிதஸ்தலங்கள் அசிங்கப்படுத்தப்படுவதற்கும், காணிகள், ஆக்கிரமிப்புக்கும்  எதிரானதாக இத்தேர்தலை பயன்படுத்துமுகமாக எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்போகிறதா என்பதே இன்றைய எதிர் பார்ப்பாகும். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar