BREAKING NEWS

அல்ஆலிம் பரீட்சைகள் க. பொ. தவுக்கு சமமானவை என்பதை கல்வி அமைச்சை ஏற்றுக்கொள்ள வேண்டும்


எமது நீண்ட கால கோரிக்கையான அல்ஆலிம் பரீட்சைகளுக்கான பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதை உலமா கட்சி வரவேற்பதுடன் அவை க. பொ. த. பரீட்சைக்கு சமமானது என்பதை கல்வி அமைச்சு ஏற்காத வரை அப்பரீட்சைகளை நடாத்துவது அர்த்தமற்றதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கு உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

இலங்கை பரீட்சைத்திணைக்களத்தால் நடாத்தப்படும் அல் ஆலிம் பரீட்சை என்பது மௌலவி ஆசிரியர் நியமனத்தின் போது மௌலவி தராதர பத்திரம் இல்லாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஆனால் நாளடைவில் அறபுக்கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் இப்பரீட்சைக்கு தோற்றும் நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் அல்ஆலிம் பரீட்சையின் பகுதி ஒன்று பகுதி இரண்டு என்பன முதவஸ்ஸிதா, தானவிய்யா என பெயர் மாற்றம் செய்யப்படுவதோடு அவை க. பொ. த. சாதாரண மற்றும் உயர் தரத்துக்கு சமமானவை என்பதை பரீட்சை திணைக்களமும், கல்வி அமைச்சும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உலமா கட்சியின் பலமான கோரிக்கையாக இருந்தது.

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உருவான அரசியல் கட்சிகள் மௌலவிமாரை கறிவேப்பிலையாக பாவித்தனரே தவிர மௌலவிமாரின் பிரச்சினைகளை கண்டு கொள்ளவே இல்லை. இதன் காரணமாகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் உருவான உலமா கட்சியின் தொடர் முயற்சி காரணமாக முஸ்லிம் சமய விவகார முன்னாள் பணிப்பாளர் அஷ்ஷேய்க் அமீர் அவர்களின் அழைப்pன் பேரில் உலமா கட்சிக்கும் பரீட்சை திணைக்களத்திற்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அல்ஆலிம் பரீட்சைகள் என்பன க. பொ. த பரீட்சைகளுக்கு சமமானது என்பதை ஏற்றுக்கொள்வதாக பரீட்சை திணைக்கள உதவிப்பணிப்பாளர் முஸ்லிம் சமய விவாகார திணைக்களத்தில் வைத்து பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட மௌலவி ஆசிரிய நியமனத்தின் போது அல்ஆலிம் சான்றிதழ் உள்ள மௌலவிமாரிடம் க. பொ. த பரீட்சையில் சித்தி பெற்றிருக்கவும் வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. 

அல் ஆலிம் பரீட்சைகளில் சித்தி பெற்றிருந்தும் அவர்களிடம் க. பொ. தவும் கேட்பது அநீதியானது என்பதை நாம் கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டினோம். ஒரு மாணவர் அறபு மொழியில் இலங்கை அரசாங்கத்தின் பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படும் அல்ஆலிம் பரீட்சைகளிலும் சித்தி பெற்று மீண்டும் கஷ்டப்பட்டு க. பொ தவிலும் சித்தி பெற்றிருக்க வேண்டுமென கோருவது மிகப்பெரிய அநியாயமாகும். உண்மையில் அல்ஆலிம் அல்லது அதற்கு பதிலாக க. பொ. த என்றிருக்க வேண்டும். பரீட்சை திணைக்களம் இதனை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருப்பினும் கல்வி அமைச்சு இதனை ஏற்காமல் இருப்பது மௌலவிமார்களுக்கு செய்யும் அநீதி மாத்திரமின்றி அல்ஆலிம் பரீட்சைகள் என்பன மௌலவிமார்களுக்கு தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. 

ஆகவே அல்ஆலிம் பரீட்சைகள் க. பொ. தவுக்கு சமமானவை என்பதை கல்வி அமைச்சை ஏற்றுக்கொள்ள வைக்கும் எமது கட்சியின் போராட்டத்துக்கு முஸ்லிம் சமய விவகார திணைக்களம் உதவுவதோடு நாட்டிலுள்ள மௌலவிமார் அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட முன்வருவதன் மூலம் இவற்றை சாதிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar